அபுதாபி
டி10 கிரிக்கெட் போட்டியின் காரணமாக வருங்காலத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெற வாய்ப்புள்ளது என்று மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஆந்த்ரே ரஸல் தெரிவித்தார்.
டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருபவர் ரஸல். ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரஸல் விளையாடி வருகிறார். இந்நிலையில் அபுதாபியில் நடைபெறவுள்ள அபுதாபி டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அவர் அபுதாபி வந்துள்ளார்.
இந்தப் போட்டியில் நார்த்தன் வாரியர்ஸ் அணிக்காக ரஸல் அணிக்காக விளையாடவுள்ளார். இப்போட்டிகள் நவம்பர் 14 முதல் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதுகுறித்து ரஸல் கூறும்போது, “முதலில் டெஸ்ட் போட்டிகள், அதைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள், டி20 போட்டிகள் என கிரிக்கெட் நாளுக்குள் நாள் வளர்ச்சி பெற்று வருகிறது. இதன் அடுத்த படிதான் டி10 கிரிக்கெட் போட்டியாகும்.
இந்த வகையிலான கிரிக்கெட் போட்டிகள் வருங்காலத்தில் ஒலிம்பிக்கிலும் இடம்பெற வாய்ப்புள்ளது. ஒலிம்பிக்கில் டி10 இடம்பெறுவதால் கிரிக்கெட் மிக உயரத்துக்குச் செல்லும். ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றால் ஒவ்வொரு வீரரும் தங்கள் அணிக்காக ஒலிம்பிக்கில் விளையாட முயற்சி செய்வர். அணிக்காக விளையாடும் சந்தர்ப்பத்தை அவர்கள் விரும்புவார்கள். டி20 போட்டியிலாவது வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் டி10 போட்டியின்போது முதல் பந்திலிருந்தே அடித்து ஆடவேண்டும்.
அபுதாபி டி10 கிரிக்கெட் போட்டிக்கு கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிக வரவேற்பு கிடைக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் பிரமாண்டமான முறையில் போட்டி நடத்தப்படுகிறது” என்றார். பிடிஐஆந்த்ரே ரஸல் கருத்து