நடைபெற்று வரும் விஜய் ஹஜாரே டிராபி லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக மும்பை தொடக்க இடது கை வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 வயதில் இரட்டைச் சதம் அடித்து மிக இளம் வயதில் லிஸ்ட் ஏ ஒருநாள் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற வரலாறு படைத்தார்.
பெங்களூருவில், ஜார்கண்ட் அணிக்கு எதிராக இவர் 154 பந்துகளில் 203 ரன்களை 17 பவுண்டரிகள் 12 சிக்சர்களுடன் விளாசித் தள்ளி அதிசயிக்கச் செய்தார். 50 ஓவர்களில் மும்பை அணீ 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது.
சஞ்சு சாம்சன் சமீபத்தில் கோவா அணிக்கு எதிராக ஒருநாள் இரட்டைச் சதம் அடித்து 212 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இப்போது வீர் குஷால், சஞ்சு சாம்சன் பட்டியலில் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.
முதலில் பேட் செய்த மும்பை அணியில் அனுபவஸ்தர் ஆதித்ய தாரேயை பின்னுக்குத் தள்ளி பிரமாதமான ஷாட்களை ஆடிய ஜெய்ஸ்வால் அதிவேக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனையடுத்து இருவரும் 34.3 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 200 ரன்களைச் சேர்த்தனர். தாரே 102 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
2வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சித்தேஷ் லாத் 105 ரன்கள் கூட்டணியில் 32 ரன்களையே அடித்தார் மீதி ரன்களை விளாசியது ஜெய்ஸ்வால். சஞ்சு சாம்சனின் அதிகபட்ச 212 ரன்களை தாண்டி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 203 ரன்களில் ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால்.
மிகப்பெரிய திறமைசாலி என்றும் மும்பையிலிருந்து அடுத்து வரும் மிகப்பெரிய அதிரடித் திறமை என்றும் விதந்தோதப்படும் இந்த அதிசய இளம் வீரர் ஜெய்ஸ்வால் இந்த விஜய் ஹஜாரே டிராபியில் அடிக்கும் 3வது சதமாகும், அதாவது 5 போட்டிகளில் 3வது சதம், ஏற்கெனவே கோவா அணிக்கு எதிராக 113, கேரளாவுக்கு எதிராக 122 என்று சதமெடுத்துள்ளார் ஜெய்ஸ்வால்.
ஜெய்ஸ்வாலின் சிறப்புத் தன்மை என்னவெனில் அதிரடி ஆட்டமும் ஆடுவார், நிதானமாக சூழ்நிலைக்குத் தகுந்தவாறும் ரன் சேர்ப்பிலும் ஈடுபடும் ஒரு சிறப்புத் திறன் வாய்ந்த வீரர் ஆவார்.