புதுடெல்லி
ஐசிசி சார்பில் நடக்கும் அனைத்துப் போட்டிகளில் ஆட்டம் சமனில் முடிந்தால், முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் மட்டுமே பயன்படுத்தப்படும், பவுண்டரி எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூஸிலாந்து இடையிலான ஆட்டம் சூப்பர் ஓவரிலும் சமனில் முடிந்தது. இதனால் பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து அதிகமான பவுண்டரி அடித்திருந்ததால், அந்த அணிக்கு உலகக் கோப்பை வழங்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையானதையடுத்து, இந்த விதிமுறையை ஐசிசி மாற்றியுள்ளது.
ஜூலை 14-ம் தேதி நடந்த உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 242 ரன்கள் சேர்த்தது. 243 ரன்களைத் துரத்திய இங்கிலாந்து அணி 242 ரன்கள் சேர்த்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவர் முறை வீசப்பட்டது. இதில் நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்ததால் குழப்பம் ஏற்பட்டது. அதன்பின் எந்த அணி அதிகமான பவுண்டரிகள் அடித்தது என்று கணக்கிட்டதில் இங்கிலாந்து 22 பவுண்டரிகளும், நியூஸிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்ததால், இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உலகக்கோப்பை வழங்கப்பட்டது.
பவுண்டரி அடிப்படையில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றியாளரை முடிவு செய்த ஐசிசி விதிமுறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. முன்னாள் வீரர்கள், பல்வேறு நாட்டு அணிகளின் வீரர்கள், ரசிகர்கள் என ஐசிசியின் ஏற்றுக்கொள்ளமுடியாத விதிகளை கடுமையாகச் சாடினார்கள்.
போட்டி நடத்திய நாட்டுக்கே இங்கிலாந்து அணிக்கே கோப்பையை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் ஐசிசி செயல்பட்டது என்றெல்லாம் காட்டமாக விமர்சனங்களை ரசிகர்கள் வைத்தனர்.
இதையடுத்து, துபாயில் நேற்று நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.
அதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் , "ஐசிசி கிரிக்கெட் கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில், ஐசிசி நடத்தும் போட்டிகளில் ஆட்டம் சமனில் முடிந்தால் முடிவுகளை அறிய சூப்பர் ஓவர் மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இனிமேல் ஆட்டம் சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை மட்டுமே முடிவு அறிய பயன்படுத்தப்படும், பவுண்டரிகள் அடிப்படையிலான விதிமுறை நீக்கப்படுகிறது.
லீக் ஆட்டங்களில் சூப்பர் ஓவர் முறையில் ஆட்டம் சமனில் முடிந்தால் அது சமனில் முடிந்ததாகவே கருத்தில் கொள்ளப்படும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டம் சூப்பர் ஓவரில் சமனில் முடிந்தால், முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் மட்டுமே பயன்படுத்தப்படும்.
அதாவது அதிகமான ரன்களை எந்த அணிஅடித்து வெற்றி பெறுகிறதோ அதுவரை சூப்பர் ஓவர் முறைதான் பயன்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளது.
ஐசிசியின் இந்த விதிமுறை மாற்றத்தை நியூஸிலாந்து வீரர்கள் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளனர். நியூஸிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் ட்விட்டரில் கூறுகையில், " உங்களின் அடுத்த திட்டம் சிறந்த பைனாகுலர் வாங்கி டைட்டானிக் கப்பலில் ஐஸ் இருப்பதைக் கண்டுபிடிப்பதுதானே" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வீரரும், பேட்டிங் பயிற்சியாளருமான கிரேக் மெக்மிலன் கூறுகையில், "மிகவும் தாமதமான முடிவு ஐசிசி" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இறுதிப்போட்டியின்போது நடுவர்கள் முடிவிலும் ஏராளமான குழப்பம் ஏற்பட்டது. நியூஸிலாந்து வீரர் த்ரோ செய்த பந்து ஓவர் த்ரோவில் பவுண்டரிக்குச் செல்ல அதற்கு நடுவர் தர்மசேனா 5 ரன்கள் வழங்குவதற்குப் பதிலாக 6 ரன்களை வழங்கி ஆட்டத்தின் முடிவை மாற்றினார். இதுதொடர்பாக முதலில் நடுவர் சைமன் டாபுல் கடுமையாக விமர்சனம் செய்து, நடுவர் தவறு இழைத்துவிட்டார் என்று காட்டமாகத் தெரிவித்தார்
முதலில் தன் மீதுதவறு இல்லை, மூன்றாவது நடுவரிடம் பேசிவிட்டுத்தான் தீர்ப்பு அளித்தேன் என்று நடுவர் தர்மசேனா தெரிவித்தார். அதன்பின் தன்னுடைய தவறை உணர்ந்துவிட்டதாகத் தெரிவித்தாலும், தனது முடிவுக்கு கடைசி வரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ்