மும்பை
மும்பையில் நடந்த 18 வயதுக்குக் குறைவான உலக இளையோர் செஸ் சாம்பியன் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்னாநந்தா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
18 வயதுக்குக் குறைவானவர்களுக்கான உலக இளையோர் செஸ் சாம்பியன் போட்டி மும்பையில் நடந்தது. இதில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தைச் சேர்ந்தவரான ஆர். பிரக்னாநந்தா பங்கேற்றார்
இதில் நேற்று நடந்த 11-வது மற்றும் இறுதிச்சுற்றில் ஜெர்மனி வீரர் வேலன்டைன் பக்லஸை வீழ்த்தினார் பிரக்னாநந்தா. இதன் மூலம் 11 சுற்றுகளில் 9 புள்ளிகளுடன் பிரக்னாநந்தா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 2-வது இடத்தை ஆர்மேனிய வீரர் சாந்த் சர்க்யாசன் வென்றார்.
இது தவிர இந்தியாவுக்கு மகளிர் பிரிவில் 14 வயது, 16வயது, 18 வயது ஆகிய பிரிவுகளில் வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கமும் என மொத்தம் 6 பதக்கங்கள் கிடைக்க உள்ளது.
இதுகுறித்து உலக இளையோர் சாம்பியன்ஷிப் அமைப்பு ட்விட்டரில் தமிழக சிறுவன் பிரக்னாநந்தா தங்கப் பதக்கம் பெறும் நிகழ்வை வீடியோவாக வெளியிட்டுளள்ளது. அதில் " இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் நடந்து வருகிறார். 18 வயதுக்குள்ளோரில் இந்திய வீரர் பிரக்கானந்தா தனது முதலாவது தங்கப்பதக்கத்தை பெறுகிறார்" எனத் தெரிவித்துள்ளது
மேலும், இந்திய செஸ் அமைப்பு ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில் " சிறப்பாக செயல்பட்ட பிரக்னாநந்தாவுக்கு வாழ்த்துகள். 18 வயதுக்கு கீழ்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரக்னாநந்தா 9 புள்ளிகள் பெற்று 2700 ரேட்டிங் புள்ளிகள் பெற்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளது
தமிழகத்தைச் சேர்ந்தவரான பிரக்கானந்தா உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமைக்கு சொந்தக்காரர். பிரக்னாநந்தா தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த பிரம்மராஜன் நெகி தனது 13 வயது 4 மாதங்கள் 22 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
, ஏஎன்ஐ