விளையாட்டு

ஃபாலோ ஆன் கொடுத்தார் விராட் கோலி: 2வது இன்னிங்ஸில் மார்க்ரமுக்கு நாட் அவுட்டை அவுட் கொடுத்த நடுவர்

செய்திப்பிரிவு

புனே டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று 326 ரன்கள் பின் தங்கியிருந்த தென் ஆப்பிரிக்க அணியை மீண்டும் பேட் செய்யுமாறு விராட் கோலி பணித்தார்.

ஆனால் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா சரியாக தொடங்கவில்லை, அந்த அணியின் தொடக்க வீரர் மார்க்ரம் இஷாந்த் சர்மா வீசிய முதல் ஓவரின் 2வத் பந்திலேயே எல்.பி.ஆகி வெளியேறினார். இரு இன்னிங்ஸ்களிலும் டக் அடித்து 'Pair' புகழ்பெற்றார் மார்க்ரம்.

பாலோ ஆன் தொடங்கு முதல் ஓவரின் முதல் பந்து இஷாந்த் வீசியது பெரிய இன்ஸ்விங்கராக அமைய மார்க்ரம் அதனை ஆடாமல் விட்டார், பந்து ஸ்டம்புக்கு மேல் சென்றது.

இதனையடுத்து மார்க்ரம் மனதில் லேசான ஐயம் ஏற்பட்டிருக்கும் என்று உணர்ந்த இஷாந்த் சர்மா அடுத்த பந்தை அவுட் ஸ்விங்கராக வீசாமல் மீண்டும் இன்னும் கொஞ்சம் உள்ளே ஸ்டம்புக்குள் ஒரு இன்ஸ்விங்கரை வீச கால்காப்பில் வாங்கினார் நடுவர் கையை உயர்த்தினார். இதை ரிவியூ செய்தால் நடுவர் தீர்ப்பு என்று வரும் என்று தெரிந்து அவர் பெவிலியன் திரும்பினார்.

ஆனால் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வதாக ரீப்ளேயில் காட்டியது, அவர் ஏன் ரிவியூ செல்லவில்லை என்றால் அம்பயர்ஸ் கால் என்று வரும் என்று தெரிந்துதான். இதே வெளியே செல்லும் பந்து நடுவர் நாட் அவுட் என்று கூறி இந்தியா ரிவியூ சென்றிருந்தால் அது நாட் அவுட்டாகவே இருந்திருக்கும். இந்த வாய்ப்புதான் தென் ஆப்பிரிக்காவுக்கு மறுக்கப்படுகிறது. கையை உயர்த்தினாலும் அம்பயர்ஸ் கால், கையை உயர்த்தாவிட்டாலும் அம்பயர்ஸ் கால், ஆனால் அணிகள்தான் மாறுகிறது, கையை உயர்த்தும் போதெல்லாம் தென் ஆப்பிரிக்கா பாதிக்கப்படுகிறது, கையை உயர்த்தாத போதெல்லாம் இந்தியா பயனடைகிறது. இந்தத் தர்க்கம் சில காலங்களாக நடந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களுக்கு நாட் அவுட்டிற்கு நீக்கமற, ஐயம்திரிபற கையை உயர்த்தும் நடுவர் மயங்க் அகர்வாலுக்கும் கோலிக்கும் உயர்த்தவில்லை என்பதே பிரச்சினை. எதிரணி பேட்ஸ்மென்களுக்கு தயக்கமில்லாமல் உயரும் கை நம் முக்கிய வீரர்களுக்கு உயர மறுக்கிறது என்பதுதான் சிக்கல். அவுட் கொடுத்த பிறகு ரிவியூ செய்து அம்பயர்ஸ் கால் என்று வந்தால் ஒருவேளை ரிவியூவையும் இழக்க நேரிடலாம் ஆகவே மார்க்ரம் நடந்து பெவிலியன் சென்றார்.

சற்று நேரம் முன்பாக டிபுருய்ன், உமேஷ் யாதவ்வின் லெக் திசை பந்தை தேவையில்லாமல் தொட இடது புறம் பெரிய டைவ் அடித்து மிகப்பிரமாதமான கேட்சை எடுத்தார் சஹா, தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்கள்.

SCROLL FOR NEXT