விஜய் ஹசாரே ட்ராபி 50 ஓவர் முதல்தர கிரிக்கெட்டில் கேரள விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இரட்டைச் சதம் அடித்து 212 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து புதிய சாதனையைப் படைக்க கேரள அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது.
விஜய் ஹசாரே டிராபி குரூப் ஏ எலைட் பிரிவில் ஆலூரில் இன்று கோவா அணியை எதிர்த்து கேரளா அணி ஆடி வருகிறது. இதில் கேரள அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது.
இதில் ராபின் உத்தப்பா 10 ரன்களில் பீல்டருக்கு இடையூறு செய்ததாக விசித்திரமாக ரன் அவுட் ஆனார். விஷ்ணு விநோத் 7 ரன்களில் வெளியேற கேரள அணி 8வது ஓவரில் 31/2 என்று தடுமாறியது.
அப்போது சஞ்சு சாம்சன், சச்சின் பேபி ஆகியோர் இணைந்தனர். கோவா பந்து வீச்சை மைதானம் நெடுக சிதறடித்தனர். கோவா வீரர்கள் மைதானத்தில் ஓடிய ஓட்டத்தை ரோடில் ஓடியிருந்தால் கோவாவே சென்றிருக்கலாம்.
இருவரும் சேர்ந்து 41 ஓவர்களில் 338 ரன்களை 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
இதில் சஞ்சு சாம்சன் 21 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 212 ரன்களை விளாச, சச்சின் பேபி 135 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 127 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
சஞ்சு சாம்சன் இந்த சரவெடி 212 ரன் இரட்டைச் சதத்தின் மூலம் கடந்த விஜய் ஹசாரே சீசனில் 202 ரன்கள் எடுத்த கன்வர் கவுஷல் (உத்தராகண்ட்), சாதனையை முறியடித்தார்.
அதே போல் 338 ரன்கள் கூட்டணி மூலம் சஞ்சு சாம்சன், சச்சின் பேபி கூட்டணி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் கூட்டணி அமைத்துச் சாதனை படைத்தனர்.
இன்னும் எத்தனை காலம்தான் இவர் இந்திய அணியில் நுழைய காத்திருக்க வேண்டுமோ?