அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்துப் போட்டியின் பெண்கள் பிரிவில் சென்னை சாந்தோம், ஆண்கள் பிரிவில் சென்னை வேலம்மாள் பள்ளி அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.
தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழன் ஊரக கூடைப்பந்து முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் முதலாவது அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்துப் போட்டி கடந்த 22-ம் தேதி முதல் தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
19 வயதுக்கு உட்பட்டோருக் கான இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன. நேற்றுமுன்தினம் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. பெண்கள் பிரிவில் சென்னை சாந்தோம் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் இடத்தை கேரள மாநிலத்தைச் சேர்ந்த லிட்டில் ஃபிளவர் பள்ளி அணியும், 3-ம் இடத்தை தஞ்சை தூய இருதய பெண்கள் பள்ளியும் பிடித்தன.
ஆண்கள் பிரிவில் சென்னை வேலம்மாள் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை முத்தையா பள்ளி 2-ம் இடத்தையும், சென்னை ஏவிஎம்ஆர் பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.25,000 மற்றும் சுழற்கோப்பை, 2-ம் பரிசாக ரூ.20,000 மற்றும் சுழற்கோப்பை, 3-ம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட்டன. சிறந்த தடுப்பாட்டக்காரர், சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில், எம்எல்ஏ எம்.ரங்கசாமி, மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.