அதிரடியாக பேட் செய்த இலங்கை அணி வீரர் ராஜபக்சே 
விளையாட்டு

இலங்கையைக் காப்பாற்றிய ராஜபக்சே; டி20 தொடரை வென்று அசத்தல்; நம்பர்ஒன் பாக். படுதோல்வி

செய்திப்பிரிவு

லாகூர்

ராஜகபக்சேவின் அதிரடி ஆட்டம், பிரதீப், ஹசரங்காவின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால் லாகூரில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 35 ரன்கள் வித்தியாத்தில் வென்று டி20 தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி.

முதலில் பேட்செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னணி வகித்துள்ளது.

பாகிஸ்தானில் பாதுகாப்பு சூழல்களைக் கருத்தில் கொண்டு இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பலர் இந்தப் பயணத்தில் பங்கேற்கவில்லை. இதனால், அனுபவமில்லாத 2-ம் தர வீரர்களையே இலங்கை அணி அனுப்பி இருந்தது. அந்த இளம் வீரர்கள் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இலங்கை அணி தகுதிச்சுற்று மூலம் தயாராக வேண்டிய நிலையில் இருக்கும் போது, இதுபோன்ற வெற்றி அந்த அணிக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

இதில் குறிப்பாக இலங்கை அணியின் இடதுகை பேட்ஸ்மேன் இளம் வீரர் பனுகா ராஜபக்சேவின் அதிரடிஆட்டம் முக்கியத்துவம் பெற்றது. களத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் எடுத்தார்.

அதன்பின் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வகாப் ரியாஸ், முகமது அமிர், இமாத் வாசிம் ஆகியோரின் பந்துகளை நொறுக்கிவிட்டார். 48 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து இலங்கை அணியின் ஸ்கோர் உயர்த்தினார். இதில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டநாயகன் விருதையும் ஜெயசூர்யா பெற்றார்.

இவருக்குத் துணையாக பேட் செய்த ஜெயசூர்யா 34 ரன்கள் சேர்த்தார். இருவரும் சேர்ந்து 94 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

மற்றவகையில் இலங்கை வீரர்கள் யாரும் பெரிய அளவுக்கு பேட்டிங்கில் சோபிக்கவில்லை. கேப்டன் சனாகா 24 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர் நுவான் பிரதீப், லெக்ஸ்பின்னர் டி சில்வா ஆகியோர் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையையும் ஆட்டிப் படைத்தனர். குறிப்பாக டி சில்வா வீசிய 8-வது ஓவரில் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாதிஸ்தானை நிலைகுலையச் செய்தார். அகமது ஷேசாத் (13),உமர் அக்மல் (0), சர்பிராஸ் அகமது (26) என வரிசையாக வெளியேறினார்கள்.

அதேபோல நுவான் பிரதீப்பும் முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 போட்டியில் நம்பர் ஒன் அணியான பாகிஸ்தானுக்கு கிலி ஏற்படுத்தினார்கள்.

டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியின் நேற்றைய ஆட்டம் மோசமான ஆட்டத்தின் உச்சகட்டமாகும். அந்த அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மல் தொடர்ந்து 4-வது முறையாக கோல்டன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அவரை ட்விட்டரில் பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் முன்னணி பேட்ஸ்மேன்களான பக்கர் ஜமான், பாபர் ஆசம், அகமது ஷேசாத், சர்பிராஸ் அகமது ஆகியோர் 52 ரன்களுக்குள் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

அதிலும் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங் மகாமோசம், கையில் எண்ணையை ஊற்றிக்கொண்டு பந்தைப் பிடித்ததைப் போன்றுதான் பீல்டிங் செய்தார். பல கேட்ச்சுகளையும், ரன்அவுட்களையும், பீல்டிங்குகளையும் கோட்டை விட்டனர்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஆசிப் அலி, இமாத் வாசிம் ஆகியோர் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 47 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தனர். இந்தக் கூட்டணிதான் ஓரளவுக்கு கவுரமான ஸ்கோரைப் பெற உதவியது. இமாத் வாசிம் (47), ஆசிப் அலி (29) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள்அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இலங்கை தரப்பில் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளையும், டி சில்வா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT