துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ இஸ்தான் கோப்பை டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த வீனஸ் 4-6, 6-7 (4) என்ற நேர் செட்களில் உக்ரைனைச் சேர்ந்த தகுதிநிலை வீராங்கனையான கேத்ரினா பாண்டரெங்கோவிடம் தோல்வி கண்டார்.
இதற்கு முன்னர் 2009-லும் கேத்ரினாவிடம் தோல்வி கண்டுள்ளார் வீனஸ் வில்லியம்ஸ். அப்போது சர்வதேச தரவரிசையில் வீனஸ் 3-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தோல்வி குறித்துப் பேசிய வீனஸ், “என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆட முயற்சித்தேன். எப்போதுமே முதல் ஆட்டம் சிறப்பாக அமையாது. ஆனால் என்னை எதிர்த்து விளையாடிய கேத்ரினா, இங்கு தகுதிச்சுற்றில் விளையாடி வந்திருக்கிறார். அதனால் எனக்கு எதிராகவும் சிறப்பாக ஆடி வெற்றி கண்டுள்ளார். இந்தத் தோல்வி வருத்தமளிக்கிறது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காகவே இங்கு வந்தேன்” என்றார்.