ஹர்பஜன் சிங் : கோப்புப்படம் 
விளையாட்டு

கிரிக்கெட்டில் இருந்து ஹர்பஜன் சிங் விரைவில் ஓய்வா?

செய்திப்பிரிவு

லண்டன்

இந்திய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு அறிவிக்க உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு 'தி ஹண்ட்ரட்' (The Hundred) எனப்படும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதன்படி 100 பந்துகள் மட்டுமே வீசப்படும். இந்தப் போட்டிக்காக 25 வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான வரைவுப் பட்டியல் வரும் 20-ம் தேதி லண்டனில் வெளியாகிறது.

அந்த வரைவு வீரர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. அதில் ஹர்பஜன் சிங் இடம்பெற்றால் அடிப்படை விலை ஒரு லட்சம் பவுண்ட்களாக (ரூ.8.75 கோடி) இருக்கும்.

இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக ஹர்பஜன் சிங் தனது கிரிக்கெட் ஓய்வை அறிவிப்பார் எனத் தெரிகிறது. பிசிசிஐ விதிமுறைப்படி ஒரு வீரர் ஓய்வை அறிவிக்காமல் வெளிநாடுகளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் விளையாடக் கூடாது. அந்த வகையில் சமீபத்தில் யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்து குளோபல் டி20 போட்டியில் விளையாடி வருகிறார். அதைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டால் தனது ஓய்வை அறிவிப்பார் எனத் தெரிகிறது.

100 பந்துகள் போட்டியில் விளையாடுவதற்கு ஹர்பஜன் சிங் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். வரும் 20-ம் தேதி வரைவுப் பட்டியலில் ஹர்பஜன் சிங் பெயர் இருக்கும்பட்சத்தில் அவர் ஓய்வை அறிவிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

39 வயதாகும் ஹர்பஜன் சிங் கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் விளையாடவில்லை. டெஸ்ட் போட்டியில் கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்த இடத்தில் 417 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 260 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரில் தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்டகாலம் விளையாடிய ஹர்பஜன் சிங் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

இதற்கிடையே ஹர்பஜன் சிங் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் இல்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிசிசிஐ அமைப்பிடம் இருந்து தடையில்லாச் சான்றை இதுவரை ஹர்பஜன் சிங் கேட்கவில்லை. எந்த லீக் ஆட்டத்திலும் பெயரைச் சேர்க்கலாம். இதற்கு பிசிசிஐ தடை விதிக்காது. ஆனால், பிசிசிஐ அனுமதியில்லாமல் விளையாட முடியாது. இந்த விவகாரம் வெளியே வந்தபின் ஹர்பஜன் சிங்கிடம் பேசினோம். அவ்வாறு 100 பந்துகள் கிரிக்கெட் தொடர்பாக திட்டம் இல்லை என்றார்" எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

          
SCROLL FOR NEXT