இந்திய ஹாக்கி அணி வீரர்களை சந்தித்துப் பேசி அவர்களுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை அளித்தார் சச்சின் டெண்டுல்கர்.
உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்திய ஹாக்கி அணி தயாராகி வரும் நிலையில் அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சச்சின் அவர்களை சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது வீரர்களுடன் சுமார் 2 மணி நேரம் செலவிட்ட சச்சின், தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தார் சிங்கின் வேண்டுகோளை ஏற்று சச்சின் ஹாக்கி வீரர்களை சந்தித்தார்.
இது தொடர்பாக சர்தார் சிங் கூறியது: உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் நிலையில் நீங்கள் வந்து எங்கள் வீரர்களை சந்தித்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டால் அவர்கள் உற்சாகமடைவார்கள் என்று சில நாள்களுக்கு முன்பு சச்சினிடம் தெரிவித்தேன். என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சச்சின், எங்களை திடீரென நேரில் வந்து சந்தித்து ஆச்சர்யம் அளித்தார். வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அவர் எங்களுடன் கலந்துரையாடினார் என்றார்.
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்தில் மே 31 முதல் ஜூன் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.