பிரான்ஸைச் சேர்ந்த ஃபார்முலா 1 கார் பந்தய வீரர் ஜூஸ் பியான்சி (25) நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். கடந்த அக்டோபரில் ஜப்பானில் நடை பெற்ற ஃபார்முலா 1 போட்டி யின்போது விபத்தில் சிக்கி கடந்த 9 மாதங்களாக கோமா நிலையில் இருந்த அவர் கடைசி வரை நினைவு திரும்பாமலேயே உயிரிழந் தார்.
கடந்த அக்டோபர் மாதம் ஜப்பானின் சுஸுகாவில் நடைபெற்ற ஜப்பான் கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தய போட்டியின்போது மழை காரணமாக சில கார்கள் விபத்தில் சிக்கின. அந்த கார்களை மீட்கும் பணியில் கிரேன் ஒன்று ஈடுபடுத்தப்பட்டது. அந்த கிரேன் மீது போட்டியில் பங்கேற்றிருந்த பியான்சியின் கார் 200 கி.மீ. வேகத்தில் மோதியது. இதில் பியான்சியின் மூளைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து கோமா நிலைக்கு சென்ற அவரை அதிலிருந்து மீட்பதற்காக கடந்த 9 மாதங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தெற்கு பிரான்ஸில் உள்ள பியான்சியின் சொந்த ஊரான நைஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார்.
கடந்த 21 ஆண்டுகளில் ஃபார்முலா 1 பந்தயத்தின்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த முதல் நபர் பியான்சி ஆவார். இதற்கு முன்னர் 1994-ம் ஆண்டு சான் மரினோ கிராண்ட்ப்ரீ போட்டியில் பங்கேற்றபோது ஆரிட்டன் சென்னா விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.
இது தொடர்பாக பியான்சி குடும்பத்தினர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், “பியான்சி எப்போதுமே கடைசி வரை போராடக்கூடியவர். ஆனால் அவரின் போராட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அவரை இழந்ததால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலி மிகப்பெரியது. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
கடந்த 9 மாதங்களாக எங்களுக்கு ஆதரவாக இருந்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி. உங்களுடைய அன்பும், ஆதரவும் கடினமான சூழலை சமாளிக்கும் ஆற்றலை எங்களுக்கு தந்தது” என குறிப்பிட் டுள்ளனர்.
பியான்சி 2013-ம் ஆண்டு மராஸியா கார் பந்தய அணியில் இணைந்தார். 34 கிராண்ட்ப்ரீ போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், இரு உலக சாம்பியன்ஷிப் புள்ளிகளை பெற்றுள்ளார். பியான்சியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மராஸியா அணி, “கடும் போராட்டத்துக்குப் பிறகு பியான்சியை இழந்துவிட்டோம். அவர் எங்கள் அணிக்காக கார் ஓட்டியது எங்களுக்கு கிடைத்த பெரும் பேறாகும்” என தெரிவித்துள்ளது.
1989-ம் ஆண்டு இத்தாலி பெற்றோருக்கு பிறந்தவரான பியான்சி, கார் பந்தய குடும்ப பின்னணியைக் கொண்டவர் ஆவார். அவருடைய தாத்தா மவுரோ 1960-களில் ஃபார்முலா 3 போட்டி மற்றும் எண்டுரன்ஸ் போட்டிகளில் பங்கேற்றவர். பியான்சியின் தந்தை பிலிப், கார்ட்டிங் ரேஸ்களில் பங்கேற்று வந்தவர்.
அந்தக் குடும்பத்தில் இருந்து கார் பந்தயத்தின்போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த 2-வது நபர் பியான்சி ஆவார். இதற்கு முன்னர் அவருடைய மாமா (தந்தை வழியைச் சேர்ந்தவர்) லூசியன் 1969-ல் நடைபெற்ற கிராண்ட்ப்ரீ போட்டியின்போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 34. அவர் 17 கிராண்ட்ப்ரீ போட்டியில் பங்கேற்றுள்ளார்.
பாரம்பரியமிக்க கார் பந்தய குடும்பத்தில் பிறந்தவரான பியான்சியின் கனவெல்லாம் ஃபார்முலா 1 போட்டியில் மிகப்பெரிய இடத்தை எட்ட வேண்டும் என்பதுதான். தன் எண்ணப்படியே வேகமாக வளர்ச்சி கண்ட பியான்சியின் வாழ்க்கை இவ்வளவு வேகமாக முடிவுக்கு வரும் என யாருமே எதிர்பார்த் திருக்கமாட்டார்கள்.