தோஹா: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் பந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
தோஹாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் பந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் 3-வது ஹீட்டில் இடம் பெற்றிருந்தார். பந்தய தூரத்தை அவர், 8 நிமிடங்கள் 25.23 விநாடிகளில் கடந்து 7-வது இடம் பிடித்தார். ஒவ்வொரு ஹீட்டிலும் முதல் 3 இடங்களை பெறும் வீரர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் அவினாஷ் சேபிள் ஏமாற்றம் அடைந்தார். ஆனால் அவினாஷ் ஓடிய போது இரு முறை மற்ற வீரர்கள் இடையூறு செய்தது தெரியவந்தது. இதுகுறித்து இந்திய தடகள சங்கம், பந்தய நடுவரிடம் முறையீடு செய்தது. இதைத் தொடர்ந்து நடுவர், பந்தயத்தின் வீடியோவை ஆய்வு செய்தார். இதில் அவினாஷை இருமுறை மற்ற தடகள வீரர்கள் முன்னேறிச் செல்ல விடாமல் தடுப்பது உறுதி செய்யப்பட்டது.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு பந்தய விதிகள் 163.2-ன் படி அவினாஷ் சேபிள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நாளை நடைபெறும் இறுதி சுற்றில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலில் அவினாஷ் சேபிள் 16-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் பந்தயத்தில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் அவினாஷ் சேபிள்.