புதுடெல்லி
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் அவர் நீண்ட காலத்துக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழலில் இருப்பதால் சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹர்திக் பாண்டியாவின் கீழ்இடுப்பு உள்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் இருப்பதால் லண்டனுக்கு சிகிச்சைக்காக செல்ல உள்ளார். இதன் காரணமாக வரும் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர் மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடர்வரை ஹர்திக் பாண்டியா விளையாடுவது சந்தேகம்தான் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ஹர்திக் பாண்டியாவின் கீழ் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற விரைவில் லண்டன் செல்கிறார். சிகிச்சையில் இறங்கிவிட்டால் மீண்டும் கிரிக்கெட் விளையாட நீண்டகாலம் ஆகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆசியக் கோப்பைப் போட்டியின்போதுதான் ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து கண்டுபிடிக்கப்பட்டது.
சிகிச்சைக்காக லண்டன் சென்றால், நிச்சயம் வங்கதேசத் தொடரில் ஹர்திக் விளையாட மாட்டார். அதுமட்டுமல்லாமல் எப்போது மீண்டும் நலமாகி விளையாட வருவார் என்பதும் தெரியாது. குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை ஆகலாம். லண்டன் செல்ல முடியாவிட்டால், பிசிசிஐ சார்பி்ல ஜெர்மனிக்கு ஹர்திக் பாண்டியாவை அனுப்பி வைக்கவும் பேச்சு நடக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.
25 வயதான ஹர்திக் பாண்டியா ஒருநாள், டெஸ்ட், டி20 அனைத்திலும் சிறந்த ஆல்ரவுண்டராக அசத்தினார். அணியில் பும்ராவுக்கு அடுத்து மிரட்டல் விடுக்கும் பந்துவீச்சாளராக வளர்ந்து வந்தார். இப்போது ஹர்திக் பாண்டியா அடுத்த 6 மாதங்கள் வரை விளையாடுவது சந்தேகம் எனத் தெரியவந்துள்ளது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும்.
ஹர்திக் பாண்டியா இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும் 532 ரன்களையும் சேர்த்துள்ளார். 54 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 937 ரன்களையும், 54 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 40 டி20 போட்டிகளில் 310 ரன்களும், 38 விக்கெட்டுகளையும் பாண்டியா சாய்த்துள்ளார்.
பிடிஐ