விளையாட்டு

2018 அடிலெய்ட் டெஸ்ட் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்காத கோபத்திற்கு காரணம் என்ன?- மனம் திறக்கிறார் இஷாந்த் சர்மா

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவுக்குச் சென்று 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதன் முதலாக ஆஸ்திரேலியாவை தொடரில் தோற்கடித்த துணைக்கண்ட அணி என்ற பெயரை விராட் கோலி தலைமையில் இந்தியா சாதித்தது.

இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்தியா முதலில் பேட் செய்து புஜாராவின் அதியற்புத சதத்தினால் (123) 250 ரன்களை எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்குச் சுருண்டது அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் புஜார 71 ரன்களை எடுக்க ரஹானே அரைசதம் எடுக்க இந்திய அணி 307 ரன்கள் எடுத்தது, 323 ரன்கள் வெற்றி இலக்குடன் இறங்கிய ஆஸ்திரேலியா 259/9-லிருந்து 291 ரன்கள் வரை வந்து அச்சுறுத்தியது கடைசியில் நேதன் லயன் 38 ரன்களையும் ஹேசில்வுட் 13 ரன்களையும் எடுக்க கையருகில் வந்த வெற்றிக்கனி பறிபோய்விடுமோ என்ற நிலையில் அஸ்வின், ஹேசில்வுட்டை வீழ்த்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அபார வெற்றி பெற்றது இந்தியா. இஷாந்த் சர்மா இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமே 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியதோடு 5 நோ-பால்களை முக்கியக் கட்டங்களில் வீசியது அணியை தோல்வியடையச் செய்திருக்கும்.

இதனையடுத்து அவர் தன் மீதே கோபமடைந்து வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்தார். விராட் கோலி இதனை முதன் முதலில் வெளிப்படுத்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் விக்கெட் விழுந்து விட்ட நிலையில் இருமுறை நோ-பால் என்று நடுவர் தீர்ப்பளித்தனர். 2வது இன்னிங்சில் ஏரோன் பிஞ்சை எல்.பி.செய்தார், ஆனால் அது நோ-பால். பிறகு ஷான் மார்ஷ் முக்கியமான இன்னின்சை ஆடிவந்த போது மார்ஷ் விக்கெட்டையும் வீழ்த்தினார் ஆனால் அதுவும் நோ-பால் ஆனது. அதே போல் நேதன் லயன் ஆஸி. அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற நேரத்தில் பிளம்ப் எல்.பி. நோ-பாலினால் விரயமானது. இந்த ஓவருக்கு முந்தைய ஓவரில் இஷாந்த் சர்மா வீசிய நோ-பால்கள் நடுவரின் பார்வையிலிருந்து தப்பியது ஆனால் சேனல் 7 கேமராவிலிருந்து தப்பவில்லை.

இப்படியாக இஷாந்த் சர்மா வெறுப்படைந்தார், இதனையடுத்து அணி வெற்றி பெற்ற போது கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிவிட்டார்.

இது தொடர்பாக தற்போது கிரிக்கெட் மந்த்லி இதழுக்காக மனம் திறந்த இஷாந்த் சர்மா கூறியதாவது:

மிகவும் நெருக்கமான போட்டி அது, இத்தனையாண்டுகளாக் ஆடிவிட்டு, இத்தனை பெரிய தவறுகள் செய்யக் கூடாது. நேர்மையாகக் கூற வேண்டுமெனில் எனக்கு பெரிய அசிங்கமாகப் போய் விட்டது முட்டாள் போல் உணர்ந்தேன். ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன் பார்ட்னர்ஷிப் வலுவாகிக் கொண்டிருந்தது. நான் தான் ஆட்டத்தை முடிக்க வேண்டும்.

ஏற்கெனவே அந்தப் போட்டியில் ஏரோன் பிஞ்சை நான் வீழ்த்தினேன் ஆனால் நோ-பால், அதே போல்தான் அந்தப் போட்டியை தோற்றிருந்தால் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன கூறுவார்கள் என்பதல்ல விஷயம், எனக்கு நானே திருப்தி அடைய முடியாததாகி விடும். எனவே அந்த நேரத்தில் நோ-பால்கள் என்னுடைய தவறுதான். நான் என்னுடைய தவறுகளை மறைத்தால் ஒரு மனிதராகவும் வீரராகவும் நான் முன்னேறவே முடியாது என்று உணர்ந்தேன்.

நான் என் தவறுகளை உணரும் போதுதான் நான் முன்னேற முடியும் என்பதை ஆழமாக நம்புகிறேன். எனவே நான் என்னைச் சுற்றி என் முகத்திற்கு எதிர்த்தாற் போல் நான் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன்.

அதனால்தான் கோபத்தில்... என் மீதான கோபத்தில்தான் நான் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.

இவ்வாறு கூறினார் இஷாந்த் சர்மா.

SCROLL FOR NEXT