மகளிர் உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டிகளில் 5-வது இடத்துக்கான பிளே ஆஃப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜப்பானை 1-0 என்று வீழ்த்தி ஒலிம்பிக் தகுதி வாய்ப்பை நெருங்கியுள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய அணி தகுதி பெறும் வாய்ப்பை நெருங்கியுள்ளது. அப்படி தகுதி பெற்றால் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் பெருமையை எட்டும்.
இத்தாலியை பெனால்டி ஷூட் அவுட்டில் 5-4 என்று வீழ்த்தி இந்தியா இந்தப் போட்டியில் களமிறங்க, ஜப்பானோ, போட்டியை நடத்தும் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தப் போட்டியில் களமிறங்கியது.
ஆட்டம் தொடங்கி 30-வது விநாடியிலேயே இந்தியா பெனால்டி கார்னர் வாய்ப்பு பெற்றது. ஆனால் இந்திய வீராங்கனை பூனம் ராணியின் ஷாட்டை ஜப்பான் கோல் கீப்பர் சாகியோ அசானோ தடுத்தார்.
அதன் பிறகு இந்தியா ‘டி’-வட்டத்துக்குள் ஜப்பான் வீராங்கனைகள் இருமுறை ஊடுருவினர். இதில் ஒன்றை இந்திய நட்சத்திர கோல் கீப்பரான சவிதா பூனியா காலை நீட்டி தடுத்துவிட்டார்.
முதல் 15 நிமிட ஆட்டத்தில் கோல் இல்லாமல்தான் போகும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா மிக வேகமான கால்கள் மற்றும் அருமையான ட்ரிப்ளிங்கில் அவருக்காக குறிவைத்து கவர் செய்ய நிறுத்தப்பட்ட ஜப்பான் வீராங்கனையை நொடியில் கடந்து கோல் நோக்கி அபாரமாக அடித்தார், ஆனால் இதனையும் ஜப்பான் கோல் கீப்பர் தடுத்தார், ஆனால் பந்து மீண்டும் விளையாட்டு எல்லைக்குள் வந்தது, அதனை இந்திய வீராங்கனை ராணி ராம்பால் தூக்கி கோலுக்குள் அடித்தார். இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றது.
பிறகு பரபரப்பான கடைசி கால் மணி நேர ஆட்டத்தில் சுமார் 5 பெனால்டி கார்னர்களை பெற்ற ஜப்பான் இந்திய கோல் கீப்பர் சவிதாவைத் தாண்டி ஒன்றும் செய்ய முடியாமல் திணறி தோல்வி தழுவியது.
இரண்டு பக்கங்களிலும் சவிதா சிலபல டைவ்களை மேற்கொண்டு ஜப்பானின் தீவிர கோல் முயற்சிகளை முறியடித்தார்.
ஒலிம்பிக் வாய்ப்புகள் ஒரு பார்வை:
மாஸ்கோவில் 1980-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி ஒன்றில்தான் இந்திய மகளிர் ஹாக்கி அணி விளையாடியது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி கவுண்ட் டவுன் தொடங்கும் போது இந்திய மகளிர் ஹாக்கி அணி தற்போது பெற்றுள்ள 5-ம் இடம் ஒலிம்பிக் தகுதியைப் பெற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
5 காண்டினெண்டல் ஹாக்கி தொடர்களில் சாம்பியன்கள் தகுதி பெற மற்றொரு வழி அனுமதிக்கப்படுகிறது என்பதால் சில அணிகள் இரண்டு ஹாக்கி தொடர்களிலும் ஒலிம்பிக் தகுதி நிலையை எட்டலாம். இதனால் 2 உலக லீக் ஹாக்கி அரையிறுதித் தொடர்களில் முதல் 4 இடங்களில் வராத அணிகளுக்கும் ஒலிம்பிக் வாய்ப்பு உள்ளது என்ற அளவில் 5-ம் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு ஒலிம்பிக் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஜெர்மனி, பிரிட்டன், சீனா ஆகிய அணிகள் வாலென்சியாவில் நடைபெற்ற உலக லீக் போட்டிகளில் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளன. தற்போது பெல்ஜியம், ஆண்ட்வெர்ப்பில் நடைபெறும் உலக ஹாக்கி லீக் போட்டிகளிலிருந்து 3 அணிகள் ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறும். இதில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற தென்கொரிய மகளிர் ஹாக்கி அணி ஏற்கெனவே ஒலிம்பிக் தகுதி பெற்றுவிட்டது.
இந்த இரண்டு உலக லீக் அரையிறுதி ஹாக்கி தொடர்களில் டாப் 4 அணிகலில் ஆப்பிரிக்க சாம்பியன் மட்டுமே இடம்பெறாத ஒரே அணியாகும். இது மேலும் சில அணிகளுக்கு ஒலிம்பிக் தகுதி வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது. இதில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரேசில் விளையாடத் தகுதி பெற்றாலும் மேலும் சில அணிகளுக்கு தகுதி வாய்ப்பு உள்ளது.
அனைத்து அமெரிக்க ஹாக்கி தொடர்களில் பிரேசிலின் ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் 5-ம் இடம் பெற்றால் ஒலிம்பிக் தகுதிபெறும். கனடாவில் இன்னும் 2 வாரங்களில் தொடங்கும் அனைத்து அமெரிக்க போட்டிகளில் பிரேசில் மகளிர் அணி ரிசர்வ் அணியாக இருக்கும். ஏதாவது அணி பங்கேற்பதிலிருந்து விலகினால் பிரேசில் அந்த இடத்தில் விளையாடும்.