சிட்டகாங்கில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை நெருக்கிய வங்கதேசம் 248 ரன்களுக்கு சுருட்டியது.
ஒருநாள் போட்டிகளில் கலக்கி வரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை 37 ரன்களுக்குக் கைப்பற்ற இளம் லெக் ஸ்பின்னர் ஜுபைர் ஹுசைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முஸ்தபிசுர் ஒரே ஓவரில் ஆம்லா, டுமினி, டிகாக் ஆகியோரை வெளியேற்றி நடுக்களத்தை காலி செய்ய, ஜுபைர் ஹுசைன் பின்கள வீரர்களான ஹார்மர் மற்றும் ஸ்டெய்னை ஒரே ஓவரில் வீழ்த்த 136/1 என்று வலுவாகச் சென்று கொண்டிருந்த தென் ஆப்பிரிக்கா 248 ரன்களுக்கு மடிந்தது.
விக்கெட்டுகளை இவர்கள் வீழ்த்தினாலும் விக்கெட் வீழ்த்தாத மொகமது ஷாகித் என்ற வேகப்பந்து வீச்சாளர் தனது கட்டுக்கோப்பான பந்து வீச்சினால் வைட் ஆஃப் த கிரீசிலிருந்து கடினமான கோணத்தில் பந்து வீசி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களை கடுமையாக குழப்பத்தில் ஆழ்த்தினார். பந்து உள்ளே வருகிறதா, வெளியே செல்கிறதா என்பதை தீர்மானிக்க முடியாமல் உள்ளே வரும் பந்துக்கு அவசரம் அவசரமாக மட்டையைக் கொண்டு வந்தும் வெளியே செல்லும் பந்துகளை ஆட முற்பட்டு தோல்வியடைந்ததும் தென் ஆப்பிரிக்க பேட்டிங்கின் இன்றைய ஒரு அம்சமாகவே மாறியிருந்தது.
ஷாகித் 17 ஓவர்கள் வீசி அதில் 9 மெய்டன்களுடன் 34 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஷாகிப் அல்ஹசன், மஹமுதுல்லா, தைஜுல் இஸ்லாம் ஆகியோரும் ஷாகித்தின் நெருக்கடி பந்துவீச்சைப் பயன்படுத்தி தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். உணவு இடைவேளைக்குப் பிறகு ஷாகித் வீசிய வேகப்பந்து வீச்சு உண்மையில் இத்தகைய பிட்ச்களில் எப்படி வீசவேண்டும் என்பதற்கான பாடம், அவர் பந்துகளை எந்த விதத்திலும் ரன்னுக்குச் செலுத்த முடியாமல் டுபிளெஸ்ஸிஸ் மற்றும் டீன் எல்கர் திணறினர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு 18 ஓவர்களில் 28 ரன்களையே எடுக்க முடிந்த்து. இந்த வெறுப்பில்தான் எல்கர் எட்ஜ் செய்து வெளியேறினார். இவர் அவுட் ஆனவுடன் ஷாகிபை கொண்டு வர டுபிளெசிஸ் எல்.பி. ஆனார்.
டிவில்லியர்ஸுக்கு பதில் களமிறங்கிய பவுமா போராடி அரைசதம் எடுத்தார். இடையில்தான் முஸ்தபிசுர் ரஹ்மானின் பரபரப்பான அந்த ஓவரில் ஆம்லா, டுமினி, டிகாக் வெளியேற்றப்பட தென் ஆப்பிரிக்கா 173/6 என்று ஆனது. பிலாண்டர் 24 ரன்கள் எடுத்தார். ஆனால் அவருக்கு 18 ரன்களில் கேட்ச் விடப்பட்டது.
பவுமாவின் அரைசதம், பிலாண்டரின் 24 ரன்களால் 248 ரன்களை எட்டியது தென் ஆப்பிரிக்கா, 2-வது புதிய பந்தில் பவுமாவை வீழ்த்தி தனது 4-வது விக்கெட்டைக் கைப்பற்றினார் முஸ்தபிசுர்.
2 ஓவர்கள் இன்று ஆடிய வங்கதேசம் விக்கெட் இழக்காமல் 7 ரன்களை எடுத்துள்ளது. நாளை 2-ம் நாள் ஆட்டம். வங்கதேச ஆக்ரோஷத்தை தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெய்ன், மோர்கெல், பிலாண்டரால் கட்டுப்படுத்த முடிகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.