இன்சியான்
கொரியாவில் இன்சியான் நகரில் நடந்துவரும் கொரியா ஓபன் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார்.
தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சிந்து, 10-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை ஹாங் பீவெனிடம் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளார்.
கொரியா ஓபன் பாட்மிண்டன் போட்டி நடந்துவருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் இன்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை ஹாங் பெய்வனை எதிர்கொண்டார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
ஏறக்குறைய பரபரப்பாக ஒரு மணிநேரம் நடந்த ஆட்டத்தில் ஹாங் பெய்வனிடம் 21-7, 22-24, 15-21 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தார் சிந்து. பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த மாதம் தங்கம் வென்ற சிந்து, இந்தப் போட்டியில் முதல் சுற்றிலேயே அடைந்த தோல்வி அதிர்ச்சியளிக்கிறது.
முதல் செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, பெய்வனுக்கு 7 கேம்கள் மட்டும் எடுக்க வாய்ப்பளித்து எளிதாகக் கைப்பற்றினார். 2-வது செட்டில் சிந்துவுக்கு, பெய்வன் கடும் போட்டி அளித்தார். இருவரும் ஒருவொருக்கு ஒருவர் சளைக்காமல் விளையாடினார்கள். மேட்ச் பாயின்ட் எடுக்க வேண்டிய நேரத்தில் சிந்து அடித்த ஷாட்டால் அதைத் தவறவிட்டார். இதனால், 2 புள்ளிகளில் சிந்து வெற்றி வாய்ப்பை இழந்தார்.
வெற்றியாளரை முடிவு செய்யும் 3-வது செட்டில் சிந்துவின் போராட்டம் தொடக்கத்தில் இருந்தே எடுபடவில்லை. அவரின் பல சர்வீஸ்களை பெய்வன் பிரேக் செய்தார். இறுதியில் 15-21 என்ற கணக்கில் எளிதாக பெய்வன் கைப்பற்றி சிந்துவை வீழ்த்தினார்.
சிந்து தொடர்ச்சியாக முதல் சுற்றில் வெளியேறும் 2-வது மிகப்பெரிய போட்டியாகும். கடந்த வாரம் நடந்த சீனா ஓபன் வேர்ல்டு டூர் சூப்பர் பாட்மிண்டன் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை பாம்பாவே சோசுவாங்கிடம் தோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே சிந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரணீத் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தார். டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் ஆன்டன்சனிடம் 9-21 முதல் சுற்றில் தோல்வி அடைந்த பிரணீத், 2-வது சுற்றில் 7-11 என்ற கணக்கில் இருந்தபோது, காயம் காரணமாக பிரணீத் வெளியேறினார்.
ஐஏஎன்எஸ்