விசாகப்பட்டணத்தில் அக்.2ம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார்.
முதுகில் ‘ஸ்ட்ரெஸ் பிராக்சர்’ காரணமாக அவர் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக அவர் உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்ட போது லேசான பிராக்சர் இருந்தது தெரியவந்ததையடுத்து அவர் விலக்கிக் கொள்ளப்படுவதாக பிசிசிஐ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே பும்ராவுக்குப் பதிலாக உமேஷ் யாதவ் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உமேஷ் யாதவ் கடைசியாக 2018-ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் ஆடினார். முதல் டெஸ்ட் விசாகப்பட்டணத்திலும் மற்ற 2 டெஸ்ட் போட்டிகள் புனே மற்றும் ராஞ்சியில் நடைபெறுகிறது..
2018 ஜனவரியில் பும்ரா முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது முதல் உலகின் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளராக அவர் எழுச்சி பெற்றார். 19.24 என்ற சராசரியின் கீழ் அவர் 12 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகளை அள்ளிக்குவித்தார்.
மே.இ.தீவுகளில் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இந்தத் தொடர் உள்நாட்டு ரசிகர்கள் மத்தியில் அவர் ஆடும் முதல் டெஸ்ட் தொடராக இருந்தது, இந்நிலையில் அவரது இன்மை இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
காயத்தின் பிடியில் பும்ரா சிக்கி அவரது பந்து வீச்சை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.