பிரதிநிதித்துவப்படம் 
விளையாட்டு

முதல் முறையாக இந்தியாவில் என்பிஏ கூடைப்பந்து: அதிபர் ட்ரம்ப் போட்டியைக் காண வருவாரா?

செய்திப்பிரிவு

மும்பை

இந்தியாவில் இதுவரை நடந்திராத அமெரிக்காவின் என்பிஏ கூடைப்பந்து போட்டி முதல் முறையாக மும்பையில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இந்தப் போட்டி குறித்து குறிப்பிட்ட அதிபர் ட்ரம்ப், "பிரதமர் மோடி இந்தப் போட்டிக்கு என்னை அழைத்திருக்கிறாரா?" எனக் கேட்டுவிட்டு, ''நான் இந்தப் போட்டியைக் காண வரக்கூடும்'' என்றும் பீடிகையுடன் பதில் அளித்தார்.

அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து அமைப்பு சார்பில் நடத்தப்படும் கூடைப்பந்து போட்டி உலக அளவில் பிரபலமானது. ஏறக்குறைய அமெரிக்காவில் உள்ள 29 அணிகளும், கனடாவில் உள்ள ஒரு அணியும் இந்த அமைப்பில் உள்ளன. அமெரிக்காவில் விளையாடப்படும் முக்கியமான விளையாட்டுகளில் முதன்மையானது இந்த என்பிஏ கூடைப்பந்துப் போட்டியாகும்.

இந்த என்பிஏ கூடைப்பந்துப் போட்டியை இந்தியாவில் மும்பையில் நடத்த ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அக்டோபர் மாதம் 4 மற்றும 5-ம் தேதிகளில் இந்தப் போட்டி நடத்தப்பட உள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியானா பேஸர்ஸ் அணியும், சாக்ராமென்டோ கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏறக்குறைய 80 சதவீதம் விற்றுத் தீர்ந்துவிட்டன என்று போட்டி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்

ஹூஸ்டன் நகரில் நேற்று நடந்த ஹவுதி மோடி நிகழ்ச்சியின் போது அதிபர் ட்ரம்ப் என்பிஏ கால்பந்து குறித்துக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "அமெரிக்காவின் மிகச்சிறந்த இந்தியாவுக்கான ஏற்றுமதி என்பிஏ கூடைப்பந்து. விரைவில் என்பிஏ கூடைப்பந்துப் போட்டியை இந்தியர்கள் பார்க்கப் போகிறார்கள். மும்பையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்தப் போட்டியை பார்வையிடுவார்கள். எனக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறாரா? கவனமாக இருங்கள் நான் திடீரென்று வந்துவிடுவேன்" எனத் தெரிவித்து சிரித்தார்.

அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் ஆட்டத்தைக் காண 3 ஆயிரம் பேர் ரிலையன்ஸ் ஜூனியர் புரோகிராம் திட்டத்தில் வர உள்ளார்கள். அடுத்த நாள் அனைவரும் உரிய நாளில் டிக்கெட் பெற்று பார்வையிடலாம். 5-ம் தேதி போட்டிக்கான 80 சதவீதம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிகமான ரசிகர்கள் வருவார்கள் என்று போட்டி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


பிடிஐ

SCROLL FOR NEXT