மும்பை,
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் மும்பையைச் சேர்ந்தவருமான மாதவ் ஆப்தே காலமானார், அவருக்கு வயது 86. இவர் திங்களன்று மும்பை மருத்துவமனையில் உடலநலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
7 டெஸ்ட் போட்டிகளில்தான் அவர் ஆடினாலும் அடுத்த இந்திய நட்சத்திரம் என்று பேசப்படும் அளவுக்கு 1952-53 மே.இ.தீவுகள் தொடரில், அதாவது மே.இ.தீவுகளில் ஆடப்பட்ட தொடரில் இவரது சராசரி 49.27. மொத்தம் 7 டெஸ்ட் போட்டிகளில் 5 டெஸ்ட் போட்டிகளை அவர் கரீபிய மண்ணில் மே.இ.தீவுகளுக்கு எதிராகவே ஆடினார்.
அதுவும் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் 1953ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 19-25 தேதிகளில் ஆடப்பட்ட 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன மாதவ் ஆப்தே இரண்டாவது இன்னிங்சில் மிகப்பிரமாதமாக ஆடி 163 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து தோல்வியைத் தவிர்க்கச் செய்தார்.
அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மாதவ் ஆப்தே 2வதாக இருந்தாலும் 7டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு அவர் இந்திய அணிக்கு ஆடவில்லை. இது இன்னொரு புரியாதபுதிர்தான்.
இவருடன் ஆடிய வீரர்களில் ஒருவரான சந்து போர்டே, மாதவ் ஆப்தே பற்றி கூறும்போது, “மிகவும் உயிரோட்டமுள்ள ஒரு மனிதர், மும்பை கிரிக்கெட் வளர்ச்சியில் மிகப்பெரிய கரம் இவருடையது” என்றார்.
சச்சின் டெண்டுல்கரை 15 வயதிலேயெ சிசிஐக்கு ஆட வைத்தார் மாதவ் ஆப்தே. சச்சின் டெண்டுல்கரை அன்று அவர் அங்கீகரித்திருக்கா விட்டால் இன்று நமக்கு சச்சின் நாம் அறிந்த வகையில் கிடைத்திருப்பது கடினமே.
சச்சின் தன் ட்விட்டர் இரங்கலில், “மாதவ் ஆப்தே சார் பற்றிய இனிய நினைவுகள் உள்ளன. 14 வயதில் அவருடன் சிவாஜி பார்க்கில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இவரும் துங்காப்பூர் சாரும் என்னை 15 வயதில் சிசிஐ அணிக்காக ஆட வைத்ததை மறக்க முடியாது. அவர் என்னை எப்போதும் ஆதரித்தார், என் நலம் விரும்பியான அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளார்.
மலேசியாவுக்குக் குடிபெயர்ந்த இவர் மும்பை கங்கா லீகில் ஜாலி கிரிக்கெட்டர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 1948 முதல் 2002 வரை 5,000 ரன்களை எடுத்தார், கடைசியாக இவர் இந்த லீக் போட்டியில் ஆடும்போது மாதவ் ஆப்தேயின் வயது 70.