நூர்-சுல்தான்
கஜகஸ்தானில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 86 கிலோ ஆடவர் பிரிவுக்கான இறுதிச்சுற்றில் காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் பூனியா விலகியதால், வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார்.
அரையிறுதிச் சுற்றில் ஸ்விட்சர்லாந்து வீரர் ஸ்டீபன் ரிச்முத் எதிரான ஆட்டத்தின் போது, 20 வயதான இந்திய வீரர் பூனியாவின் இடது காலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்துடன் தொடர்ந்து இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்தார்.
இன்று நடைபெற இருந்த இறுதிச்சுற்றில் ஈரான் வீரர் ஹஸன் யாதானியுடன் பூனியா மோத இருந்தார். ஹன் யாதானி சர்வதேச அளவில் சிறந்த போட்டியாளர் என்பதால், அவருடன் காயத்துடன் மோதுவது கடினம் என்பதால் தீபக் பூனியா விலகினார். இதனால் வெள்ளிப் பதக்கத்துடன் பூனியா போட்டியில் இருந்து வெளியேறினார்
இதுகுறித்து பூனியா நிருபரிடம் தொலைபேசியில் கூறுகையில், "என்னுடைய இடது கணுக்காலில் அரையிறுதிச் சுற்றின்போது காயம் ஏற்பட்டது. இதனால் என்னால் காலை தூக்கி வைத்து போட்டியில் மல்யுத்தத்தில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. அதிலும் இறுதி ஆட்டத்தில் ஹஸன் போன்ற வலிமையான வீரருடன் மோதுவது கடினம். ஆனால், அவருடன் மோதுவது என்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், என்னுடைய காயம் எனக்கு உதவவில்லை" எனத் தெரிவித்தார்.
86 கிலோ எடைப் பிரிவில் முதல் முறையாக உலகக் கோப்பை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இளம் வீரர் பூனியா வெள்ளியோடு விடை பெற்றார்.
இந்திய அளவில் சுஷில் குமார் மட்டுமே கடந்த 2010-ம்ஆண்டு மாஸ்கோவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 66 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். அதன்பின் யாரும் வெல்ல முடியாத நிலை இருக்கிறது.
பிடிஐ