இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பிசிசிஐயின் பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் தலைமை ஆலோசகராக டெல்லியின் முன்னாள் காவல் ஆணையர் நீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கெனவே ஐபிஎல் போட்டியின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக ஓர் ஆண்டு பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிரிக்கெட் செயல்பாடுகளுக்கான பொது மேலாளராக எம்.வி.தரும், முதன்மை ஒருங்கிணைப்பாளராக அம்ரித் மாத்தூரும், போட்டியின் மேலாளராக (நிதி) ஆர்.பி.ஷாவும், கிரிக்கெட் செயல்பாடுகளுக்கான மேலாளராக கே.வி.பி.ராவும், நிஷாந்த் ஜீத் அரோரா ஊடக மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து மற்றும் உபசரிப்பு மேலாளராக மயங்க் பாரிக்கும், போட்டி ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகராக ரத்னாகர் ஷெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரத்னாகர் ஷெட்டி 2011 உலகக் கோப்பை தொடரின் இயக்குனராக இருந்தவர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.