விளையாட்டு

நாங்கள் மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு உதவுகிறோம்: தன் சொந்த பார்மைத் தேடிக்கொண்டிருக்கும் ஷிகர் தவண்

இரா.முத்துக்குமார்

இந்திய அணியில் நுழையும் இளம் வீரர்களுக்கு இதுவே சரியான தருணம் அடுத்த ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு இளம் வீரர்கள் தயாராக தற்போதைய இந்திய அணி நல்ல மேடையை அமைத்துக் கொடுக்கிறது என்று கூறுகிறார் ஷிகர் தவண்.

அவர் கூறும்போது, “வாஷிங்டன் சுந்தர் அருமையாக வீசுகிறார், நமக்கு விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுக்கிறார். பேட்ஸ்மென்களை ரன் எடுக்கவிடாமல் முடக்குகிறார். அவர் பந்து வீச்சில் நல்ல கட்டுப்பாடும் உள்ளது பல வகையான பந்துகளையும் வீசுகிறார்.

தீபக் சாஹர் இருவழிகளிலும் ஸ்விங் செய்கிறார், வேகமும் கூடியுள்ளது. இவர்கள் தற்போதிலிருந்து அனுபவம் பெற்று டி20 உலகக்கோப்பையை ஆடுவதற்கான சிறந்த களம் அமைந்துள்ளது.

மூத்த வீரர்களான நாங்கள் இளம் வீரர்களுக்கு உதவுகிறோம். ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் அய்யர் இறங்கும் போது அவர்களுடன் பேசி பதற்றமடையாமல் ஆடுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறோம். ஒரு குறிப்பிட்ட சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களைச் சிந்திக்கச் செய்கிறோம். நான் பேட் செய்யும் போது கூட ரோஹித், கோலி ஆகியோருடன் பேசுவேன், அவர்களும் பேசுவார்கள், அதாவது களத்தில் கலந்துரையாடல் அவசியம்.

இளம் வீரர்கள் எந்த ஒரு விஷயத்தைப் பேச விரும்பினாலும் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.

இந்த மூத்த வீரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்று இளம் வீரர்கள் கூறாமல் இருந்தால் சரி. ஷிகர் தவண் முதலில் தன் சொந்த பேட்டிங்கின் குறைபாடுகளை களைந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும், இந்திய அணியில் நிறைய ஆலோசகர்கள் பெருகிவிட்டார்கள், ஆலோசனை வழங்கத்தான் ரவிசாஸ்திரி, விக்ரம் ராத்தோர் இன்னும் எண்ணற்ற உதவிக்குழுக்கள் இருக்கின்றனரே. மூத்த வீரர்கள் தங்கள் பேட்டிங் சீரான முறையில் ரன் எடுக்குமாறு இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

டெஸ்ட் அணியிலிருந்து ஷிகர் தவணை உட்கார வைத்து விட்டார்கள், இது அவருக்குப் பின்னடைவு. இதை மீட்டெடுக்க தன் பேட்டிங்கை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்க அணியில் இருக்கிறோம் என்றால் எப்படி?

‘மனிதனின் தந்தை குழந்தைகளே’ என்றார் மகாகவி வேர்ட்ஸ்வொர்த். மனிதகுலத்துக்கே தந்தை குழந்தைகள் என்று அவர் கூறும் போது மூத்த வீரர்கள் பலர் இளம் வீரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதுதான் பெருந்தன்மை. இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம், அல்லது வழங்குகிறார் என்ற போர்வையில் இந்திய அணியில் காலங்காலமாக இளைஞர்களின் புதுவரவு வழியை அடைத்த வரலாற்றைத்தான் பார்த்து வருகிறோம்.

இளைஞர்களுக்கு உதவுகிறோம் என்றும் கேப்டன் கோலிக்கு ஆலோசனை வழங்குகிறோம் என்று கூறும் மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றும் ஆலோசனைகளை வழங்கலாமே, திராவிட், லஷ்மண் போல.

இந்நிலையில் தன் சொந்த பார்மைத் தேடிக்கொண்டிருக்கும் ஷிகர் தவண் இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவதாகப் பேசத்தொடங்கியுள்ளார். இதுவும் எதுவரை போகும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

SCROLL FOR NEXT