விளையாட்டு

ரிஷப் பந்த் மீது தேவையற்ற அழுத்தம் சுமத்தப்படுகிறது: அஜித் அகார்கர் கருத்து 

செய்திப்பிரிவு

இந்திய அணியில் தற்போது பேசப்படும் பொருளாக இருப்பவர் ரிஷப் பந்த், ஏனெனில் தோனிக்கு மாற்று என்று கூறிக்கூறி அவரது தனித்தன்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டு அது அவரது பேட்டிங்கில் ஒரு குழப்பத்தைத் தோற்றுவித்துள்ளது.

இது அவரது ஷாட் தேர்விலும் பிரதிபலிக்க தொடர்ச்சியாக மோசமான ஷாட் தேர்வில் அவர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பி வருகிறார்.

அவர் மீது ரவிசாஸ்திரியும் விராட் கோலியும் தேவையற்ற அழுத்தங்களை ஏற்றுவதாகவே தெரிகிறது.

இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ கருத்துப் பகிர்வு நிகழ்ச்சி ஒன்றில் அஜித் அகார்க்கர் கூறியதாவது:

அவரை இன்னும் கொஞ்சம் கீழே இறக்க வேண்டும், 4ம் நிலையில் கூடுதல் அழுத்தம் எப்போதும் இருக்கும். உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை இப்போதுதான் அணிக்குள் நுழைந்துள்ள ஒரு வீரர் பற்றி ஏன் இவ்வளவு பேசப்பட்டு வருகிறது என்று. இந்தியாவுக்கு வெளியே 2 டெஸ்ட் சதம் எடுத்துள்ளார்.

டி20 போட்டிகள் சில வேளைகளில் சிக்கலுக்குள்ளாக்கும். ஏனெனில் ஷாட்களை ஆட வேண்டும். பந்து அடிக்கும் நிலையில் இருந்தால் அவர் அடித்தாக வேண்டும், ஆனால் ரிஷப் பந்த்தைப் பொறுத்தவரையில் ஷாட்டை செயல்படுத்தும் விதம் சரியாக இல்லை என்று தெரிகிறது.

கிரிக்கெட் ஆட்டம் ஆடுபவர்கள் அனைவருக்கும் தெரியும் இவையெல்லாம் கிரிக்கெட்டில் சகஜம் என்பது. அவரிடமிருந்து என்ன தேவை என்பதை அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். அதாவது நம்பர் 4இல் இறங்கி இன்னிங்ஸ் முழுதும் நின்று முடித்துக் கொடுக்க வேண்டுமா அல்லது தாக்கம் செலுத்தும் வீரராக அவர் இருக்க வேண்டுமா? ஆனால் அவரைப்பற்றி கொஞ்சம் அதிகமாகத்தான் பேசப்படுகிறது.

ஷ்ரேயஸ் அய்யர் நல்ல பார்மில் உள்ளார், இவரை நம்பர் 4-ல் களமிறக்கலாம், ரிஷப் பந்த்தை பின்னால் இறக்கி இன்னும் சுதந்திரமாக ஆடச் சொல்லலாம். நம்பர் 4ல் ஆடுவது கொஞ்சம் கடினமான காரியமே. ஏனெனில் 3-4 ஆண்டுகளாக யாரும் அந்த இடத்தில் நிலைக்கவில்லை என்பதைத்தானே பார்த்து வருகிறோம். அந்த நிலையில் இறங்கி வேகமாகவும் ரன்களை அடிக்க வேண்டும் இன்னிங்ஸ் முழுதும் ஆட வேண்டும் என்ற இரட்டைப் பளு அவருக்கு அதிகம்தான்.

ரிஷப் பந்த் மீது செலுத்தப்படும் அழுத்தங்களை குறைக்க வேண்டும், நான் நினைக்கிறேன் அவர் மீது ஒரு தேவையற்ற அழுத்தம் செலுத்தப்பட்டு வருகிறது. அதாவது அவர் இன்னும் இளம் வீரர்தான். எனவே அவர் மீதான அழுத்தம் தேவையற்றது.

இவ்வாறு கூறினார் அஜித் அகார்க்கர்.

SCROLL FOR NEXT