விளையாட்டு

மிஸ்பாவுக்கு பயிற்சியாளராகவும் அனுபவம் போதாது, தேர்வுக்குழுத் தலைவரும் கூடுதல் சுமை: பாக்.முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ் விமர்சனம்

செய்திப்பிரிவு

கராச்சி, பிடிஐ

பாகிஸ்தான் அணியின் தலைமைப்பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் என்ற இரண்டு பதவிகளும் குருவித் தலையில் பனங்காய் வைத்தது போன்றது என்றும் சர்பராஸ் அகமெட் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் ஜாகீர் அப்பாஸ், ஷாகித் அப்ரீடி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஷாகித் அப்ரீடி கூறும்போது, “சர்பராஸ் அகமெட் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக நீடிக்கக் கூடாது, 3 வடிவங்களிலும் கேப்டனாகக் காலந்தள்ளுவது அவருக்கு சுமை. அவர் குறுகிய வடிவ போட்டிகளில் வெற்றிகரமாக கேப்டனாக திகழ்வதற்காக இயல்பான அவா கொண்டவர்” என்றார்.

2017 முதல் சர்பராஸ் அகமெட் 3 வடிவங்களிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிக்கிறார், இதனால் அவரது சொந்த பார்மும் அடிவாங்கி அணியும் அடி மேல் அடி வாங்கி டெஸ்ட் தரவரிசையில் 7ம் இடத்துக்கு சரிந்ததே நடந்தது.

இந்நிலையில் அப்ரீடி கருத்தை பாகிஸ்தான் முன்னாள் லெஜண்ட் ஜாகிர் அப்பாசும் எதிரொலித்தார்,

“டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் கடினம், அதுவும் கேப்டனாக மிகக் கடினம். எனவே சர்பராஸ் ஒருநாள், டி20 போட்டிகளில் கேப்டனாக இருப்பதே நல்லது. அதே போல் தலைமைப் பயிற்சியாளரையும் தலைமைத் தேர்வாளராகவும் மிஸ்பா இருக்கக் கூடாது, இரண்டும் வேறு வேறு பணிகள்.

இரு பதவிகளும் மிஸ்பாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் மேலும் உயர் மட்ட கிரிக்கெட்டில் பயிற்சியாளராக அவருக்கு அனுபவமும் போதாது”என்று ஜாகிர் அப்பாஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT