கொழும்பு
இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா அடுத்த ஓர் ஆண்டுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக கடந்த மாதம் 14 முதல் 18-ம் தேதி வரை கல்லே நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் தனஞ்சயாவின் பந்துவீச்சு மீது நடுவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
அதன்பின் ஐசிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு அவரின் பந்துவீச்சை ஆய்வு செய்ததில் அவர் விதிமுறைக்கு மாறாக பந்துவீசியது தெரியவந்ததால், அவரை பந்துவீச தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது
கடந்த மாதம் 29-ம் தேதி சென்னையில் தனிப்பட்ட முறையில் வந்து தனது பந்துவீச்சை தனஞ்செயா ஆய்வு செய்தார். அதில் அது தொடர்பான அறிக்கை ஐசிசிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் தனஞ்செயா ஐசிசி விதிமுறைக்கு மாறாக அவரின் கை அசைவும், மணிக்கட்டு அசைவும் இருப்பதால் அவருக்கு தடைவிதிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போதும் இதேபோன்று தனஞ்செயா மீது நடுவர்கள் பந்துவீச்சு குறித்து புகார்கள் தெரிவித்தனர். இப்போது 2-வது முறையாகவும் புகார் தெரிவித்தனர்.
ஐசிசி விதிமுறைப்படி ஒரு பந்துவீச்சாளர் பந்துவீச்சு குறித்த புகார் அவர் மீது இரு ஆண்டுகளுக்குள் 2-வது முறையாக வரும்பட்சத்தில் அவரை அடுத்த ஒரு ஆண்டுக்கு பந்துவீசுவதில் இருந்து தடை செய்ய முடியும். அந்த அடிப்படையில் தனஞ்செயா ஒரு ஆண்டு பந்துவீச ஐசிசி தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், இந்த தடை உத்தரவுக்கு எதிராக தனஞ்செயா மேல்முறையீடு செய்து ஐசிசியை அனுகவும் உரிமைஉண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகிலா தனஞ்செயா இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில்விளையாடி 33 விக்கெட்டுகளையும், 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
பிடிஐ