விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அரை இறுதியில் அமித் பங்கால், கவுசிக்  

செய்திப்பிரிவு

கேத்தரின்பர்க்

ஆடவருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் பங்கால், மணீஷ் கவுசிக் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

ரஷ்யாவின் கேத்தரின்பர்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 52 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அமித் பங்கால், பிலிப்பைன்ஸின் கார்லோவை எதிர்த்து விளையாடினார். இதில் அமித் பங்கால் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதியில் கால் பதித்தார்.

அரை இறுதியில் கஜகஸ்தானின் ஷகன் பிபோசினோவை சந்திக்கிறார் அமித் பங்கால். 63 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் மணீஷ் கவுசிக், பிரேசிலின் வாண்டெர்சன் டி ஆலிவேராவை எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய மணீஷ் கவுசிக் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்றில் மணீஷ் கவுசிக், கியூபாவின் ஆன்டி கோமஸ் குரூஸுடன் மோதுகிறார்.

அமித் பங்கால், மணீஷ் கவுசிக் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் குறைந்தது இரு வெண்கலப் பதக்கம் இந்தியாவுக்கு உறுதியாகியுள்ளது. உலக சாம்பியன்ஷிப்பின் ஒரே தொடரில் இந்திய அணி அதிகபட்சமாக ஒரு வெண்கலப் பதக்கத்துக்கு மேல் இதுவரை வென்றது கிடையாது. மேலும் இந்தத் தொடரின் வரலாற்றில் இதுவரை இந்திய அணி ஒட்டுமொத்தமாக 4 வெண்கலப் பதக்கமே கைப்பற்றியுள்ளது. 2009-ல் விஜேந்தர் சிங், 2011-ல்
விகாஷ் கிருஷ்ணன், 2015-ல் ஷிவா தபா, 2017-ல் கவுரவ் பிதுரி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர்.

- பிடிஐ

SCROLL FOR NEXT