விளையாட்டு

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான அனல் பறக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடர்: கார்டிஃப்பில் இன்று தொடக்கம்

பிடிஐ

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க அனல் பறக்கும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் கார்டிஃப்பில் இன்று தொடங்குகிறது.

2013-14-ல் ஆஸ்திரேலி யாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி கண்ட இங்கிலாந்து 5 போட்டிகளிலும் தோற்று ‘ஒயிட் வாஷ்’ ஆனது. அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் அலாஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த முறை களமிறங்குகிறது.

ஆஸ்திரேலிய அணி கடந்த 14 ஆண்டுகளாக இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரைக் கைப் பற்றவில்லை. அந்த குறையைத் தீர்க்கும் முனைப்பில் களமிறங்கு கிறது மைக்கேல் கிளார்க் தலைமை யிலான ஆஸ்திரேலிய அணி.

உச்சகட்ட பார்மில்…

இங்கிலாந்து அணி மேற்கிந் தியத் தீவுகள் மற்றும் நியூஸி லாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமனில் முடித்த நிலையில், ஆஸ்திரேலி யாவை சந்திக்கிறது. 2015 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியாவே வெல்லும் என எல்லோரும் பேசி வந்த நிலையில், நியூஸிலாந்துக்கு எதிரான இங்கிலாந்தின் ஆட்டமும், பார்மும் இப்போது அதை மாற்றி யிருக்கிறது.

அந்த அணியின் கேப்டன் குக் நல்ல பார்மில் இருக்கும் அதே தருணத்தில் ஜோ ரூட் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஆடம் லித் என வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீவன் ஃபின், மார்க் உட் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

பலம் சேர்க்கும் வார்னர், ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய துருப்பு சீட்டாக இருப்பது டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர்தான். சமீபகாலங்களில் மிகச்சிறப்பாக ஆடியிருக்கும் இவர்கள், ஆஸ்திரேலியாவின் சுமை தாங்கி யாகவும், இங்கிலாந்து பவுலர் களுக்கு கடும் சவாலாகவும் இருப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. கேப்டன் கிளார்க், ஷான் மார்ஷ், கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், ஜோஸ் ஹேஸில்வுட், கூட்டணி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக திகழும் என தெரிகிறது. இவர்களில் குறிப்பாக மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் ஃபவாட் அஹமதுவை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.

இந்தப் போட்டிதான் தொடரின் எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக ஆடுவதற்கான உந்துதலாக அமையும் என்பதால் இரு அணி களுமே வெற்றியோடு தொடங்க முயற்சிக்கும். உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் இங்கிலாந்து அணி அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடும் கட்டுப்பாடு

ஆஷஸ் தொடரில் இருஅணி வீரர்களும் மாறிமாறி பேட்ஸ்மேன்களை வாய்ச்சண் டைக்கு இழுத்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி விக்கெட்டை கைப்பற்ற முயற் சிப்பது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. அதுவும் சமீபத்திய காலங்களில் இந்த வாய்ச்சண்டை மிக மோசமான கட்டத்துக்கு சென்றுள்ளது. அதனால் இந்தப் போட்டியில் அதுபோன்ற சண்டைகள் நிகழ்வதைத் தடுக்க ஐசிசி தீவிரம் காட்டி வருகிறது.

அது தொடர்பாக இரு அணிகளின் கேப்டன்களையும் அழைத்து போட்டி ரெப்ரி ரஞ்சன் மடுகலே ஆலோசனை நடத்தியுள் ளார். அப்போது பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து வெளியேறும்போது அவர்களை பவுலரோ, பீல்டர்களோ கிண்டல் செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளார்.

68 ஆஷஸ் தொடர்கள்

இவ்விரு அணிகளும் 68 ஆஷஸ் தொடர்களில் விளையாடியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 32-லும், இங்கிலாந்து 31-லும் வெற்றி கண்டுள்ளன. 5 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. இவ்விரு அணிகளும் மொத்தம் 336 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 138 போட்டி களிலும், இங்கிலாந்து 105 போட்டிகளிலும் வாகை சூடியுள்ளன. 93 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

SCROLL FOR NEXT