விளையாட்டு

20 விக்கெட்டுகளை வீழ்த்த உங்கள் உதவி அவசியம்: ஹர்பஜனிடம் விராட் கோலி

பிடிஐ

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்குள் மீண்டும் நுழைந்துள்ள ஹர்பஜன் சிங், தான் அணிக்குள் வர ரவி சாஸ்திரி, விராட் கோலி ஆகியோர் மிகவும் விரும்பினர் என்று கூறியுள்ளார்.

பிசிசிஐ.டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, “நான் ஓய்வறைக்குள் நுழைந்த போது முற்றிலும் புதுமுகங்கள் காணப்பட்டன. இவ்வளவு புதிய வீரர்களுடன் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியளித்தது.

ஓய்வறையில் விராட் கோலி பேசும்போது, என்னைக் குறிப்பிட்டு, 'நீங்கள் இந்திய அணி வெற்றி பெறுவதற்குத் தேவையான 20 விக்கெட்டுகளை வீழ்த்த உதவி புரிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த சீசனில் நீங்கள் எங்களில் ஒருவராக இருக்கிறீர்கள், எனவே டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற உங்கள் உதவியை பெரிதும் எதிர்பார்க்கிறோம் ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் வெல்வதே குறிக்கோள். அதாவது விளையாடும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறவே விரும்புகிறோம்.

மற்ற வீச்சாளர்களிம் இதே மனநிலையில் விளையாட நீங்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். உங்கள் அனுபவம் மற்றும் திறமை மற்ற வீரர்களுக்கும் பயனுடையதாக இருக்கும், என்று பேசினார்.

ரவி சாஸ்திரியும் எனக்கு நிறைய உத்வேகம் அளித்தார். இது எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது.

நல்ல உடல்தகுதி, ஒவ்வொரு ஆட்ட நாளையும் முழுதாக வாழ்வது, தொலைதூர சிந்தனை தேவையில்லை, அன்றைய தினத்தில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். அடுத்த 5 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. எனவே இப்போது என்ன செய்ய முடியுமோ அதைப்பற்றியே என் மனம் சிந்தித்து வருகிறது.

உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும்” என்றார் ஹர்பஜன் சிங்.

SCROLL FOR NEXT