படம்: கெட்டி இமேஜஸ். 
விளையாட்டு

99 இன்னிங்ஸ்களில் 9 முறைதான் எல்.பி.ஆகியிருக்கிறார்; ஸ்மித்தை சொற்ப ரன்களில் வீழ்த்த முடியுமா? - பாண்டிங்கின் ஆலோசனைகள்

செய்திப்பிரிவு

நடப்பு ஆஷஸ் தொடரில் 2 சதங்கள், ஒரு இரட்டைச் சதம் ஒரு 92 என்று ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 671 ரன்களை விளாசியுள்ளார். அவரை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து விழிபிதுங்கி நிற்பது கடந்த 3 தொடர்களாகவே நிகழ்ந்து வரும் வாடிக்கையாகியுள்ளது.

அவர் குடுகுடுவென்று ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து வருவதும் பந்து வருவதற்கு முன்பாக செய்யும் எண்ணற்ற உடல் சேட்டைகளும் பவுலர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகத்தான் என்ற கருத்தும் தற்போது எழுந்துள்ளது. ஆனால் சுனில் கவாஸ்கருக்குப் பிறகு தன் ஆஃப் ஸ்டம்ப் எங்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து ஆடும் ‘பேக் அண்ட் அக்ராஸ்’ உத்தியைக் கையாண்டு ஆடும் தலை சிறந்த ஒரு வீரராக ஸ்மித் திகழ்கிறார்.

கடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் காற்றில் உள்ளே வந்து பிறகு லேசாக வெளியே எடுத்த பந்தில் முழுதும் திகைத்து பவுல்டு ஆகி வெளியேறினார். ஆனால் அதே பந்து ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தியிருக்க முடியாது, காரணம் அவர் பேக் அண்ட் அக்ராஸ் உத்தியில் ஆஃப் ஸ்டம்புக்கு நேராக, அருகே தன் வலது காலைக் கொண்டு சென்று விடுவார் இதனால் அந்தப் பந்தை அவர் கணித்து விடுவார். இதுதான் நல்ல வீரருக்கும் ஜீனியஸுக்கும் உள்ள வித்தியாசம் என்பது.

இந்நிலையில் இன்னொரு வலுவான பின்பாத வீரர் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்துவது குறித்து தன் ஆலோசனையை வழங்கியுள்ளார்.

“கடந்த 99 இன்னிங்ஸ்களில் ஸ்மித் 9 முறைதான் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்துள்ளார், எனவே அவரது மிடில் ஸ்டம்பைக் குறிவைப்பது ஸ்மித்துக்குச் சாதகமாகவே முடியும். நேராக வீசுவதைத்தான் அவர் விரும்புவார், அதையே பவுலர்களும் செய்தால் சரியாகாது. ஆன் திசையில் அவர் பந்தை தூக்கி அடிக்க மாட்டார், இதனால் அவர் அந்த நேர் பந்துகளில் பீட்டன் ஆகி எல்.பி. ஆகும் வாய்ப்பேயில்லை.

ஆகவே ஸ்மித் 200 ரன்கள் எடுத்தால் அதில் 160 ரன்கள் ஆஃப் திசையில்தான் அவரால் எடுக்க முடிந்தது என்பதை உறுதி செய்ய வேண்டும். 150 ரன்களை லெக் திசையில் எடுக்குமாறு வீசுவது ஒரு பயனையும் அளிக்காது.

இன்சைடு எட்ஜில் அவர் பந்தை விட்டுவிட வாய்ப்பில்லை மாறாக அவரது மட்டையின் வெளிவிளிம்பை குறிவைத்து வீசினால் ஒருவேளை எட்ஜ் ஆக வாய்ப்புள்ளது. எனவே ஆஃப் ஸ்டம்ப் லைனில் அவரது மட்டை வெளிவிளிம்பைப் பிடிக்குமாறு நீண்ட நேரம் வீசிக் கொண்டேயிருக்க வேண்டும். அவருக்கு எல்லா அணிகளும் எல்லா பந்துகளையும் வீசுகின்றன. ஓவர் த விக்கெட், ரவுண்ட் த விக்கெட், பவுன்சர்கள் என்று முயற்சி செய்து பார்த்தனர். ஆனால் பயனளிக்கவில்லை.

மேலும் ஸ்மித்தும் தன் ஸ்டைல் மூலம் எதிரணி பவுலர்களை ஆதிக்கம் செலுத்தக் கூடியவர். கடினம்தான்” என்கிறார் ரிக்கி பாண்டிங்.

SCROLL FOR NEXT