இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் : படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

பாகிஸ்தான் பயணம் ரத்தாகுமா?: விளையாட மறுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் 10 வீரர்கள் புறக்கணிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டி, இலங்கை கிரிக்கெட் அணியின் 10 வீரர்கள் பாகிஸ்தான் பயணத்தை புறக்கணித்துள்ளனர்.

கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இலங்கை அணி பயணம் செய்தது. அப்போது கடாபி மைதானத்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பேருந்தில் பயணித்தனர்.

அப்போது, வீரர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது தலிபான் மற்றும் லஷ்கர் இ ஜான்வி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். இதில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர், இலங்கை அணியைச் சேர்ந்த அலுவலகர்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துக்குப்பின், எந்த சர்வதேச அணியும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டது. கடந்த 2017-ம் ஆண்டு நீண்ட இடைவெளிக்குப்பின் லாகூருக்கு இலங்கை அணி வந்து ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் விளையாடிச் சென்றது. ஆனால், முழுமையான தொடருக்கு இலங்கை வரவில்லை.

இந்நிலையில் வரும் 27-ம் தேதி முதல் அக்டோபர் 19-ம் தேதி வரை இலங்கை அணி பாகிஸ்தான் சென்று 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இதற்கான வீரர்களும் இலங்கை அணி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால், திடீரென இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள 10 வீரர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட முடியாது எனக் கூறி தொடரைப் புறக்கணித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஏற்கனவே பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியதை நினைவு கூறிய வீரர்கள், இந்த தொடரில் இருந்து தாங்கள் விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் வீரர்களிடம் பேச்சு நடத்தியும், அவர்கள் சம்மதிக்கவில்லை.

இந்த பயணத்தில் இருந்து லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வெலா, குஷான் ஜெனித் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, ஏஞ்சலோ மேத்யூஸ், சாரங்கா லக்மால், தினேஷ் சண்டிமால், மற்றும் திமுத் கருணா ரத்னே ஆகியோர் விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

காபூரில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதில் அமெரிக்க வீரர் ஒருவரும், ரோமானிய அரசின் அதிகாரி ஒருவரும் பலியானார்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, தலிபான்கள் இடையிலான பேச்சை அதிபர் ட்ரம்ப் திடீரென ரத்து செய்தார். இதனால் ஆத்திரமடைந்த தலிபான்கள், அமெரிக்கா மீது தீவிரமாகத் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் இலங்கை வீரர்கள் அச்சப்படுகின்றனர்.


ஏஎன்ஐ

SCROLL FOR NEXT