விளையாட்டு

தோனிக்கு 34 வயது: குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிடிஐ

இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனிக்கு இன்றுடன் 34 வயது நிறைவடைகிறது. ஜூலை 7, 1981-ல் பிறந்தவர் தோனி. இன்று பிறந்த நாள் காணும் தோனிக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த கேப்டனான தோனி, 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கடந்த டிசம்பரில் ஓய்வு பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 265 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பை, 2008 விபி முத்தரப்பு தொடர், 2011 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையைக் கைப்பற்றியது என்று தோனி பல முத்திரைகளைப் பதித்துள்ளார். 2015 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை இந்திய அணியை திறம்பட வழிநடத்தி வந்துள்ளார்.

தோனிக்கான தனது வாழ்த்துச் செய்தியில் பிசிசிஐ, “தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் தெரிவிக்க, செயலர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோனி, இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஐசிசி-யும், “இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷோயப் மாலிக்கும் தனது ட்விட்டரில் தோனியை வாழ்த்தியுள்ளார்.

தோனியின் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் “தலைவர், போர்வீரர், சூப்பர் கிங்ஸின் கிங், பிறந்த நாள் வாழ்த்துக்கள், இந்திய கிரிக்கெட்டுக்கு நிகழ்ந்த ஒரு சிறப்பு தோனி” என்று பதிவிட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னா, அஜிங்கிய ரஹானே, பிராக்யன் ஓஜா உள்ளிட்ட வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் 265 ஆட்டங்களில் 8,620 ரன்களைக் குவித்துள்ள தோனி, 52.24 என்ற சராசரியை வைத்துள்ளார். 9 சதங்கள் 59 அரைசதங்கள். 670 பவுண்டரிகள், 184 சிக்சர்களை அவர் அடித்துள்ளார். மொத்தம் 246 கேட்ச்கள், 85 ஸ்டம்பிங்குகளை அவர் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT