நியூயார்க்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வேடேவை எதிர்த்து விளையாடினார். சுமார் 4 மணி நேரம் 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரபேல் நடால் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடாலுக்கு கோப்பையுடன் சுமார் ரூ.27.60 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
அமெரிக்க ஓபனில் நடால் பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2010, 2013 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் அவர், கோப்பையை கைகளில் ஏந்தியிருந்தார். ஒட்டுமொத்தமாக நடால் கைப்பற்றும் 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். 33 வயதான இடது கை வீரரான ரபேல் நடாலுக்கு, 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று அதிக பட்டங் கள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் முதலிடத் தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டமே தேவையாக உள்ளது.
அமெரிக்க ஓபனில் ‘ஓபன் எராவில்’ (1968-ல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில் முறை வீரர்களும் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்ட காலமே ‘ஓபன் எரா’ என அழைக்கப்படுகிறது.) அதிக முறை பட்டங்கள் வென்ற சாதனை ரோஜர் பெடரர், பீட் சாம்ப்ராஸ், ஜிம்மி கோனர்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வசம் உள்ளது. இவர்கள் தலா 5 முறை பட்டங்கள் வென்றுள்ளனர். இந்த சாதனையை சமன் செய்ய நடாலுக்கு மேலும் ஒரு அமெரிக்க ஓபன் பட்டம் தேவை.
ஓபன் எராவில் அதிக வயதில் அமெரிக்க ஓபனில் பட்டம் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரபேல் நடால் (33). இந்த வகையில் கடந்த 1970-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கென் ரோஸ்வால் தனது 35-வது வயதில் அமெரிக்க ஓபனில் வாகை சூடியிருந்தார்.
ரபேல் நடால் கைப்பற்றியுள்ள 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில் கடைசி 5 பட்டங்கள் அவர், 30 வயதை கடந்த நிலையில் பெற்றுள் ளார். இதன் மூலம் 30 வயதுக்கு பிறகு 5 கிராண்ட் ஸ்லாம் பட்டங் களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.