விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி சுற்றில் செரீனா, பியான்கா

செய்திப்பிரிவு

நியூயார்க் 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ், கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்கு மோதுகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் 15-ம் நிலை வீராங்கனையான கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்கு, 13-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்கை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பியான்கா ஆண்ட்ரெஸ்கு 7-6 (7-3), 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டி இறுதி சுற்றில் கால்பதித்த 2-வது கனடா வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் பியான்கா ஆண்ட்ரெஸ்கு. இதற்கு முன்னர் கடந்த 2014-ம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் கனடாவைச் சேர்ந்த பவுச்சார்டு இறுதி சுற்றில் கால்பதித்திருந்தார்.

இறுதி சுற்றில் பியான்கா ஆண்ட்ரெஸ்கு 8-ம் நிலை வீராங்கனையும் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை சந்திக்கிறார். செரீனா வில்லியம்ஸ் தனது அரை இறுதி சுற்றில் 5-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை 6-3, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT