ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சை சிதறடித்து 211 ரன்களைக் குவித்து இங்கிலாந்துக்கு எதிராகத் தன் 3வது இரட்டைச் சதம் எடுத்த ஸ்மித் சிலபல சாதனைகளை தினசரி அடிப்படையில் உடைத்து வருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிராக 11 சதங்கள் அடித்துள்ள ஸ்டீவ் ஸ்மித் 19 சதங்கள் எடுத்த ஆல் டைம் கிரேட் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் ஏன் மிகப்பெரிய வீரர் என்றால் அப்போதைய மே.இ.தீவுகளின் ராட்சத பவுலர்களுக்கு எதிராக அவர் 13 சதங்களை அடித்துள்ளார், இனி யார் இந்தச் சாதனையை உடைத்தாலும் கவாஸ்கர் எதிர்கொண்ட பந்து வீச்சா அது என்ற கேள்வி கேட்கப்படுவது அவசியம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜாக் ஹாப்ஸ் 11 சதங்களை எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 சதங்களை எடுத்துள்ளார்.
இந்தத் தொடரில் ஸ்மித் 4 இன்னிங்ஸ்களில் 589 ரன்கள், சராசரி 147.25. இதே தொடரில் மற்ற ஆஸ்திரேலியர்கள் யாரும் ஸ்மித்தில் பாதியை நெருங்கவில்லை, லபுஷேன் மட்டுமே 280 ரன்களை இந்தத் தொடரில் எடுத்துள்ளார். 2019 காலண்டர் ஆண்டில் ஸ்மித்தை விட அதிக ரன்கள் எடுத்தோர் இல்லை. 2019-ல் அதுவும் 4 இன்னிங்ஸ்களில் ஸ்மித் 589 ரன்கள் இந்தப் பட்டியலில் 513 ரன்களுடன் பென் ஸ்டோக்ஸ் 2ம் இடத்திலும் டிராவிஸ் ஹெட் 503 ரன்களுடன் 3ம் இடத்திலும் டி காக், கருணரத்னே 4, 5ம் இடங்களிலும் உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் மட்டும் ஸ்மித்தின் சராசரி 93.64 ஆகும். 39 இன்னிங்ஸ்களில் 3,184 ரன்களை 16 சதங்களுடன் எடுத்துள்ளார். பிராட்மேனின் முதல் இன்னிங்ஸ் சராசரி 113.66 ஆகும்.
கடந்த 3 ஆஷஸ் தொடர்களிலும் ஸ்மித் 500 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார். 2015 இங்கிலாந்தில் 508 ரன்கள், 2017-18 ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் 687 ரன்கள். நடப்பு தொடரில் 589 ரன்கள். எந்த ஒரு வீரரும் ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக 500 ரன்களைக் கடந்ததில்லை.