விராட் கோலி திடீரென ‘அத்யாத்மிக’ இந்திய தத்துவவாதியாகி விட்டாரோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு வாசகம் ஒன்றுடன் சட்டையின்றி ட்விட்டரில் படம் வெளியிட அது ரசிகர்களின் கேலிக்கு விருந்தாகியது.
தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் விராட் கோலி, “நமக்குள் நாம் உற்று நோக்கினால் வெளியில் எதையும் தேட வேண்டியதில்லை” என்று தொனிக்கும் ஒரு தத்துவார்த்த சொல்லாடலை வெளியிட்டுள்ளார்.
சட்டையில்லாமல் விராட் கோலி இப்படி தத்துவ முத்து ஒன்றை உதிர்க்க ட்விட்டர் வாசிகள் சிலர் சமீபத்தில் டெல்லியில் ட்ராபிக் போலீசிடம் சிக்கி அபராதம் கட்டியிருப்பாரோ என்ற ரீதியில் கேலிக்கணைகளைத் தொடுத்துள்ளனர்.
டெல்லியில் ட்ராபிக் போலீஸார் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை வைத்துக் கொண்டு ஏழை எளிய மக்களை வதைத்து வருகின்றனர். அன்று இருசக்கரவாகன் ஓட்டி ஒருவருக்கு ரூ.23,000 அபராதமும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.32,500 அபராதமும் விதித்து ‘சாதனை’ படைத்தனர்.
இதனையடுத்து டெல்லி போலீஸையும் விட்டு வைக்காமல் ட்விட்டர் வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோலியின் இந்தப் புகைப்படமும் ‘திடீர் தத்துவ முத்தும்’ ட்ராபிக் அபராதத்துடன் அவரை இணைத்து கேலிக்கு இட்டுச் சென்றது.