லாகூர்,
பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், தேர்வுக் குழுத் தலைவராகவும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்கு தகுதிபெறாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியதால், அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்தர் பதவிக்காலத்தை நீட்டிக்க பாகிஸ்தான் வாரியம் மறுத்துவிட்டது.
இதேபோலவே பந்துவீச்சுப் பயிற்சியார் அசார் முகமதுவுக்கும், பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவருக்கும் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.
இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுவினர் கடந்த வாரத்தில் புதிய தலைமைப்பயிற்சியாளர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆகியோர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு அனைத்துவிதமான பிரிவுகளுக்கும் அதாவது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கை நியமிக்கப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் தேர்வுக்குழுவில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, அனைத்துப்படிநிலைகளிலும் தெளிவு ஆகியவற்றை ஏற்படுத்தும் பொருட்டு மிஸ்பா உல் ஹக் தேர்வுக்குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 30-வது பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக். ஆனால் தலைமைப் பயிற்சியாளரே, தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும்.
முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனுஸ் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் வக்கார் யூனுஸ் தலைமைப்பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
பயிற்சியாளர் நேர்முகத் தேர்வுக்கு ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ், பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் மோசின் கான் ஆகியோர் வந்தபோதிலும் மிஸ்பா உல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மிஸ்பா உல்ஹக், வக்கார் யூனுஸ் தலைமையில் பாகிஸ்தான் அணி வரும் 27-ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதிவரை இலங்கைக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறது. பாகிஸ்தான் அணி அதன்பின், நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக மிஸ்பா உல் ஹக் தான் விளையாடும் காலத்தில் இருந்தார். 56 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த மிஸ்பா, 26 வெற்றிகளை அணிக்கு பெற்றுக்கொடுத்தார். 75 டெஸ்ட் போட்டிகளிலும், 162 ஒருநாள் போட்டிகள், 39 டி20 போட்டிகளிலும் மிஸ்பா விளையாடியுள்ளார்.
பிடிஐ