கேப்டனாக இருப்பதனாலேயே அணியில் இருக்கும் டிம் பெய்ன், 3ம் நிலையில் வார்னர், ஸ்மித் இல்லாத போது ஆஸ்திரேலியாவின் மானத்தைக் காப்பாற்றிய உஸ்மான் கவாஜாவை நீக்கக் காரணம் அவர் ரன்கள் எடுக்காததே என்கிறார்.
டிம் பெய்ன் ஆஷஸ் தொடரில் ரன்கள் எடுத்ததாக இதுவரைத் தெரியவில்லை. ஆனால் ஒரு மேக் ஷிப்ட் கேப்டனாக இருந்து வரும் இவர் கவாஜாவை நீக்கியதற்கானக் காரணத்தைக் கூறும்போது, "உஸ்மான் கவாஜா எங்கள் அணியின் முக்கிய நம்பர் 3 வீரர், ஆனால் அவரிடமிருந்து ரன்கள் வரவில்லை. ஸ்டீவ் ஸ்மித் வந்து விட்டதால் கவாஜா மீது இந்தக் கடினமான முடிவை எடுக்க நேரிட்டது.
ஆனால் கவாஜாவிடம் இன்னமும் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது அவரிடம் நல்ல டெஸ்ட் சாதனைகள் உள்ளன, நிச்சயம் அவர் அணிக்குள் மீண்டும் வலுவாகத் திரும்புவார் என்று நம்புகிறோம்.
நாங்கள் விரும்பும் அளவுக்கோ, அல்லது அவரே விரும்பும் அளவுக்கோ உஸ்மான் ரன்களை எடுக்கவில்லை. ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் வந்து விட்டார், இவ்வளவு சிறந்த வீரர் வரும் போது யாராவது அவருக்கு வழி விட வேண்டும், இருந்தாலும் கவாஜாவுக்கு துரதிர்ஷ்டம்தான்.
உஸ்மான் போன்ற ஒரு வீரர் நமக்கு பெஞ்சில் இருப்பது நல்லதுதான், அதாவது அணியை எந்த நிலைக்குக் கொண்டு செல்ல விரும்புகிறோம் என்பதற்கான வலுவான அடையாளம் ஆகும்” என்றார் டிம் பெய்ன்.
டிம் பெய்ன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, குறிப்பாக கடந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸுக்கு 8 பீல்டர்களை பவுண்டரி அருகே கொண்டு சென்று அவருக்கு அனைத்தையும் எளிதாக்கி விட்டார் என்ற கேப்டன்சி விமர்சனமும், பேட்டிங்கில் பங்களிக்காமல் இருப்பதும் கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளன.