நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முன்னேறியுள்ளார். மகளிர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 4-வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
நியூயார்க்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் ரபேல் நடாலும், தென் கொரியாவின் சங் ஹியானும் மோதினர். இதில் நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஹியானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிச்சுடன் நடால் மோதவுள்ளார்.
ஒசாகா அபாரம்: ஒற்றையர் மகளிர் பிரிவு 4-வது சுற்றில் விளையாட ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தகுதி பெற்றுள்ளார். நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியனான ஒசாகா 3-வது சுற்றில் 6-3, 6-0 என்ற நேர்செட்களில் அமெரிக்க வீராங்கனை கோகோ கவுப்பை வீழ்த்தினார்.
நவோமி ஒசாகா, அடுத்த சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக்குடன் விளையாடவுள்ளார். ஏஎப்பி