ரியோ டி ஜெனிரோ: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 2-வது நாளில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா இறுதிச் சுற்றில் 244.2 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான சவுரப் சவுத்ரி 221.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். துருக்கியின் இஸ்மாயில் கெல்ஸ் 243.1 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
புள்ளிகள் பட்டியலில் இந்தியா இரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. தொடரின் முதல் நாளில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதேவேளையில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றிருந்தார்.