விளையாட்டு

193 ரன்களுக்குச் சுருண்டது ஜிம்பாப்வே: இந்தியா 3-0 வெற்றி

செய்திப்பிரிவு

ஹராரேயில் நடைபெற்ற 3-வது, இறுதி ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. 277 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய ஜிம்பாப்வே 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் 83 ரன்களில் இந்தியா வெற்றி பெற்று ஒருநாள் தொடரை முற்றிலும் கைப்பற்றியது. 35-வது ஓவரில் 150/3 என்று ஓரளவுக்கு வாய்ப்பைத் தக்கவைத்திருந்த ஜிம்பாப்வே முதும்பானி (22) மற்றும் சிறப்பாக ஆடிய சிபாபா (82 ரன்கள் 109 பந்துகள் 7 பவுண்டரிகள்) ஆகியோர் பின்னியிடம் ஆட்டமிழக்க, பிறகு ஹர்பஜன் சிங் தனது கடைசி ஓவரில் சிகந்தர் ரசா, கிரீமர் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்த 172/7 என்று ஆகி பிறகு 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இன்னமும் 44 பந்துகள் மீதமுள்ள நிலையில் தோல்வி தழுவியது.

இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னி தொடக்கத்தில் சரியாக வீசாவிட்டாலு பிற்பாடு சிறப்பாக வீசி 10 ஓவர்கள் 1 மைடன் 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முரளி விஜய் 3 ஓவர்கள் வீசி 19 ரன்களுக்கு மிக முக்கியமான விக்கெட்டான கேப்டன் சிகும்பராவை எல்.பி.முறையில் வீழ்த்தி அசத்தினார்.

தொடகக்த்தில் இறங்கிய மசகாட்சா 7 ரன்னில் மோஹித் பந்தில் எல்.பி.ஆனார். 16/1 என்ற நிலையில் சிபாபா, சகப்வா இணைந்து ஸ்கோரை 23-வது ஓவரில் 86 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது சகபவா 27 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் படேல் பந்தில் பவுல்டு ஆனார். முதல் போட்டியில் சதம் எடுத்து வெற்றிக்கு அருகில் கொண்டு வந்த கேப்டன் சிகும்பரா முரளி விஜய் பந்தில் 10 ரன்களில் எல்.பி.ஆனார்.

97/3 என்ற நிலையிலிருந்து அடுத்த 10 ஓவர்களில் சிபாபா மற்றும் முதும்பாமி ஆகியோர் 53 ரன்களை சேர்த்து ஸ்கோரை 35-வது ஓவர் முடிவில் 150 ரன்களுக்குக் கொண்டு செல்ல அப்போது பின்னியிடம் முதும்பாமி எல்.பி.ஆனார்.

எனவே 150/3 என்ற நிலையிலிருந்து ஜிம்பாப்வே 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவியது.

ஆட்ட நாயகனாக கேதர் ஜாதவ் தேர்வு செய்யப்பட்டார். அம்பாத்தி ராயுடு தொடர் நாயகன்.

அஜிங்கிய ரஹானே கூறும்போது, “மணிஷ் பாண்டே, ஜாதவ் கூட்டணி முக்கியமாக அமைந்தது, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ராயுடு முதல் போட்டியில் சதம், விஜய் 2-வது போட்டியில் கேதர் 3-வது போட்டியில் சிறப்பாக ஆடினர். ராயுடு குணமடைந்து வருகிறார், அவர் முக்கியமான வீரர்” என்றார்.

SCROLL FOR NEXT