புதுடெல்லி,
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை பி.வி. சிந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் அவர் சந்திக்கவுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதி ஆட்டத்தில், உலகின் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த சிந்து, 4வது இடத்தில் இருந்த ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை சந்தித்தார்.
முதல் செட்டை 21-7 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டையும் 21-7 என தன் வசப்படுத்தினார். முடிவில் சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். உலக பாட்மின்டனில் சிந்து கைப்பற்றிய 5-வது பதக்கம் இது ஆகும்.
இந்நிலையில் அவர் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, இந்த வரலாற்று சாதனைக்காக தான் தனது பயிற்சியாளருக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
அவர் மேலும் பேசும்போது, "இந்தியராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். எனது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும், நன்றி சொல்கிறேன். இன்னும் கடினமாக உழைத்து நாட்டுக்காக நிறைய பதக்கங்களைக் குவிப்பேன். இது நான் நீண்ட காலமாக காத்திருந்து பெற்ற வெற்றி. 2 முறை தவறவிட்டேன். இறுதியாக இலக்கை அடைந்துவிட்டேன்" என்று கூறினார்.
முன்னதாக நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசப்பற்றை உருக்கமாக வெளியிட்டிருந்தது வைரலானது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய தேசியக் கொடி உயரே பறப்பதையும், இந்திய தேசிய கீதம் என் காதுகளில் ஒலிப்பதையும் கேட்டு என்னால் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை" எனப் பதிவிட்டிருந்தார்.