லீட்ஸ்
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி கடைசி நிமிடம் வரை பரபரப்பாக சென்று டிரா ஆனது. தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 3-வது டெஸ்ட் ஹெட்டிங்லியில் இன்று தொடங்குகிறது.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்ஸரில் கழுத்துப் பகுதியில் காயம் அடைந்த ஸ்டீவ் ஸ்மித் மூளை அதிர்ச்சி காரணமாக இன்று தொடங்கும் டெஸ்ட்டில் கலந்து கொள்ளவில்லை. அவர், இல்லாதது ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் திறனை பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஏனெனில் முதல் டெஸ்ட்டில் 122 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலிய அணியை 284 ரன்கள் வரை இழுத்துச் சென்றது ஸ்மித்தின் அபாரமான சதம்தான். 2-வது இன்னிங்ஸிலும் அவர் சதம் விளாசி மிரட்டியிருந்தார்.
மேலும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் சேர்த்து அணிக்கு சிறந்த பங்களிப்பு செய்திருந்தார். இதனால் அவரது இடத்தை ஆஸ்திரேலிய அணி நிரப்புவது சுலபமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஸ்மித் இடத்தில் மார்னஸ் லபுஷான் களமிறக்கப்படக்கூடும். ஏனெனில் அவர்தான், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஸ்மித்துக்கு பதிலி வீரராக களமிறங்கியிருந்தார். ஜோப்ரா ஆர்ச்சரின் பவுன்ஸர் லபுஷானையும் பதம் பார்த்தது. எனினும் தாக்குப்பிடித்து விளையாடி அரை சதம் அடித்து போட்டியை டிராவில் முடிக்க உதவி செய்திருந்தார்.
அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்கள் கைப்பற்றிய ஜோப்ரா ஆர்ச்சர் தனது பவுன்ஸர்களால் ஆஸ்திரேலிய அணியை இந்த டெஸ்ட் போட்டியிலும் சோதிக்கக்கூடும். ஸ்டூவர்ட் பிராடும் தனது சீரான வேகத்தால் மிரட்ட காத்திருக்கிறார்.
நேரம்: பிற்பகல் 3
இடம்: ஹெட்டிங்லி
நேரலை: சோனி சிக்ஸ்