வால்வோ இன்வைட்டேஷனல் 21 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஹாக்கிப் போட்டி நெதர்லாந்தின் பிரீடா நகரில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டி வரும் 26-ம் தேதி வரை நடக்கிறது. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், நெதர்லாந்தும் மோதுகின்றன.
கடந்த ஆண்டு நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 3 டிரா, ஒரு வெற்றி, இரு தோல்விகளைப் பதிவு செய்தது. அதன்மூலம் நல்ல அனுபவத்தைப் பெற்றுள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்கிறது. நெதர்லாந்தைத் தொடர்ந்து ஜெர்மனி, இங்கிலாந்து, நியூஸிலாந்து, சீனா ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி.
நெதர்லாந்துடனான ஆட்டம் குறித்துப் பேசிய ராணி ராம்பால், “நெதர்லாந்துக்கு எதிராக எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆடுவதற்கு காத்திருக்கிறோம். உலகின் தலைசிறந்த அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் சிறப்பான உத்திகளை கையாள்வதோடு, அபாரமாக ஆட இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். கடும் பயிற்சி பெற்றிருக்கிறோம். அனைத்து ஆட்டங்களிலும் எதிரணிகளுக்கு சவால் அளிப்போம்” என்றார்.