நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் :படம் உதவி ஐசிசி 
விளையாட்டு

கேன் வில்லியம்ஸன், தனஞ்செயா பந்துவீச தடை விதிக்கப்படுமா?- ஐசிசியில் நடுவர்கள் புகார் 

செய்திப்பிரிவு

துபாய்,

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன், இலங்கை சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயா ஆகியோரின் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அவர்களின் பந்துவீச்சு முறை குறித்து நடுவர்கள் ஐசிசியில் புகார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் ஐசிசி விதிப்படி ஆய்வுக்குப்பட்டு பந்துவீச்சைப் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து நியூஸிலாந்து அணி விளையாடி வருகிறது. கல்லேயில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் பந்துவீசிய இலங்கை ஆஃப் ஸ்பின்னர் தனஞ்செயா மற்றும் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஆகியோரின் பந்துவீச்சு முறையில் நடுவர்களுக்குச் சந்தேகம் எழுந்தது.

கேன் வில்லியம்ஸன் பேட்ஸ்மேனாக வலம் வந்தாலும் மிகவும் அரிதாகவே பந்துவீசக்கூடியவர். முதலாவது டெஸ்ட் போட்டியிலும் 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்ஸன் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், 2-வது இன்னிங்ஸில் வில்லியம்ஸன் 3 ஓவர்கள் பந்து வீசியபோதிலும் அது விதிகளுக்கு மாறாக இருந்தது.

இலங்கை சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்சயா : படம் உதவி ஐசிசி

இதேபோல இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் தனஞ்செயா இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளைச் சேர்த்துள்ளார். இவரின் பந்துவீச்சு முறையிலும் நடுவர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. ஐசிசியிடம் இருவரின் பந்துவீச்சு முறை குறித்து நடுவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர்களை ஆய்வுக்கு உட்படுத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட உத்தரவில், " நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன், இலங்கை ஆல்-ரவுண்டர் தனஞ்செயா ஆகியோரின் பந்துவீச்சு ஆட்சேபத்துக்குரிய வகையில், விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். அந்தப் புகார் அறிக்கை இரு அணிகளின் மேலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இம்மாதம் 18-ம் தேதியில் இருந்து அடுத்துவரும் 14 நாட்களுக்குள் இருவரும் தங்களின் பந்துவீச்சை முறையை ஐசிசியின் விதிப்படி சரியானதுதான் என்பதை நிரூபிக்க ஆய்வுக்கு உட்பட வேண்டும். அதில் ஐசிசி சான்று அளித்த பின்பே இருவரும் தொடர்ந்து பந்துவீச அனுமதிக்கப்படுவார்கள் " எனத் தெரிவிக்ககப்பட்டது.
பிடிஐ

SCROLL FOR NEXT