களத்தில் விறுவிறுப்பையும் ஆட்டத்தில், உத்தியில் திறமையில் நுணுக்கங்களையும் ஆக்ரோஷத்தையும் கொண்ட லார்ட்ஸ் டெஸ்ட் முடிந்த பிறகு சவுரவ் கங்குலி மற்ற அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டை உயர்த்த பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
டெஸ்ட்டின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டாலும் ஜோ ரூட்டின் சமயோசித டிக்ளேர் அதன் பிறகு ஜோப்ரா ஆர்ச்சரின், லீச்சின் பந்து வீச்சு ஆஸ்திரேலியாவை தோல்வி பயத்துக்கு இட்டுச் சென்றதும் முதல் பந்தே முகம் நோக்கி வந்த ஆர்ச்சர் அம்பை ஹெல்மெட்டில் வாங்கி நிலைகுலைந்து பிறகு போராட்ட அரைசதம் மூலம் ட்ராவை உறுதி செய்த லபுஷேன் ஆகியோராலும் பென் ஸ்டோக்ஸின் மாஸ்டர் சதத்தினாலும் லார்ட்ஸ் டெஸ்ட் ஒரு மறக்க முடியாத டெஸ்ட் ஆனது.
இதை அங்கீகரிக்கும் கங்குலி தன் ட்விட்டர் பக்கத்தில், “ஆஷஸ் தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இனி டெஸ்ட் தரத்தை உயர்த்துவது மற்ற நாடுகளின் கைகளில் உள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஹர்பஜன், கங்குலி கருத்தை ஆமோதித்து ட்வீட் செய்கையில், “அணிகள் பலமாக இருந்தால்தான் தரநிலைகளைப் பராமரிக்க முடியும். ஆனால் துயரகரமாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சொல்லப்போனால் நியூஸிலாந்தில் நியூசிலாந்து 4 அணிகள்தான் வலுவான அணிகளாகத் திகழ்கிறது ” என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.
ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் உதை வாங்காத அணியே கிடையாது, ஹர்பஜன் கூறும் வலுவான இந்திய அணி கூட அங்கு 2-1 என்று தோல்வி கண்டதைத்தான் பார்க்க முடிந்தது.
மேலும் சமீபமாக பாகிஸ்தான், இலங்கை அணிகள் இங்கிலாந்தில் ஆடியதும், மே.இ.தீவுகள் இங்கிலாந்தை வீழ்த்தியதும் என்ன தரநிலைகள் அந்தஸ்தைப் பெறாதா?
ஐசிசி பெரும்பகுதி வருவாய்களை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துதான் பகிர்ந்து கொள்கின்றன. சமத்துவமான ட்ரீட்மெண்ட் இல்லாததே டெஸ்ட் கிரிக்கெட்டில் தரநிலைகள் இறங்கக் காரணம் என்று யாராவது ஹர்பஜன் சிங்கிற்குக் கூறுவார்களா?