ஜோப்ரா ஆர்ச்சரின் பவுன்சரில் ஹெல்மெட் பாதுகாப்பற்ற கழுத்துப் பகுதியில் அடிவாங்கி ஸ்மித் மைதானத்தில் குப்புற விழுந்த போது ஆர்ச்சரின் நடத்தை கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
ஆஸி. ஊடகங்கள் சாட அதனைத் தொடர்ந்து நெட்டிசன்களும் ஆர்ச்சரின் நடத்தையை கடுமையாக விமர்சனம் செய்தனர், ஸ்மித் அடிபட்டு விழுந்தவுடன் அனைவரும் அவரைக் கவனிக்க ஆர்ச்சர் வேறொரு பக்கம் சிரித்துப் பேசிய படியே சென்ற வீடியோ காட்சி வைரலானது
இந்நிலையில் அவர் காலத்தில் பயங்கர பவுன்சரில் லாங்கர் உள்ளிட்ட வீரர்களையே பதம் பார்த்த பாகிஸ்தானின் ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் ஷோயப் அக்தருக்கே ஆர்ச்சரின் செயல் சரியல்ல என்பது தெரிந்துள்ளது.
அவர் இது பற்றிக் கூறும்போது, “பவுன்சர்கள் கிரிக்கெட்டின் ஓர் அங்கம். ஆனால் ஒரு பவுலரின் பவுன்சர் வீரர் ஒருவரின் தலையைப் பதம் பார்த்து அவர் கீழே விழும்போது பவுலர் அவரது அருகில் போய் பார்த்து உதவி செய்வது, விசாரிப்பது என்பதுதான் மரியாதை.
ஸ்மித் வலியில் துடிக்கும் போது ஆர்ச்சர் தன்பாட்டுக்குச் சென்றது அழகல்ல. நான் உடனடியாக பேட்ஸ்மேன் அருகில் சென்று கவனிப்பேன்.” என்று ஆர்ச்சரை விளாசியுள்ளார் ஷோயப் அக்தர்.
-பிடிஐ