லார்ட்ஸ் டெஸ்ட்டில் மால்கம் மார்ஷலின் புதிய அவதாரம் என்பது போல் ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார், இதில் முதலில் ஸ்மித் கன்கஷனில் வெளியேற அவருக்குப் பதிலாக இறக்கப்பட்ட லபுஷேனும் முகத்துக்கு நேராக ஹெல்மெட் கம்பியில் 94 மைல் வேகப் பந்தை வாங்கி நிலைகுலைந்தார்.
ஆனாலும் அதன் பிறகும் மன உறுதியுடனும் மேலும் சிலபல அடிகளை வாங்கியும் அரைசதம் எடுத்து ட்ராவை உறுதி செய்தார், ஒரு மொஹீந்தர் அமர்நாத் ஆனார் லபுஷேன்.
ஆஷஸ் தொடரில் தான் எதிர்கொண்ட முதல் பந்தே ஹெல்மெட்டைத் தாக்கியது பற்றி அவர் பிற்பாடு கூறும்போது, “நான் அமைதியாகவே இருந்தேன். அதாவது ‘நான் எங்கு இருக்கிறேன், ஜீரோ நாட் அவுட், அது ஒரு வேகமான பவுன்சர் என்ற உணர்வுடன் இருந்தேன். ஆனால் களத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. லார்ட்ஸில் விளையாடுவது பெரிய அனுபவம் அதை நான் இழக்கத் தயாராக இல்லை.
களத்தை விட்டு வெளியேறினால் நம் கைகள் கட்டப்பட்டது போல் ஆகிவிடும். அது இந்த சிஸ்டத்திற்கு அதிர்ச்சியாகி விடும். பந்தை மிகவும் கவனத்துடன் பார்க்க என்னை அந்த அடி பழக்கியது. ஹெல்மெட்டின் கிரில்லில்தானே பட்டது, ஒன்றுமில்லை கூலாக ஆட வேண்டியதுதான் என்றே நினைத்தேன்.
இத்தகைய பந்துகளில் ரன் அடிக்கும் விதங்களைப் பழக வேண்டும் அல்லது ஒதுங்கத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார் லபுஷேன்.