ஆஸி. வீரர் லபுஷேன், ஆர்ச்சர் பவுன்சரில் அடி வாங்கிய காட்சி. | கெட்டி இமேஜஸ். 
விளையாட்டு

களத்தில் ரத்தம் காணத் துடிக்கிறாரா ஜோப்ரா ஆர்ச்சர்?: ஸ்மித் பதிலி வீரர் லபுஷேனும் பயங்கர பவுன்சரில் நிலைகுலைந்தார்

செய்திப்பிரிவு

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி பரபரப்பான முறையில் ட்ரா ஆனது, முதல் இன்னிங்சில் 8 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் நேற்று 258/5 என்று டிக்ளேர் செய்தது.

இதனையடுத்து 267 ரன்கள் வெற்றி இலக்குடன் ஓவருக்கு 5.56 ரன்கள் என்ற விகிதத்தில் எடுக்க வேண்டிய நிலையில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி ஜோப்ரா ஆர்ச்சரின் தீப்பொறி பந்து வீச்சில் அவரிடம் 3 விக்கெட்டுகளை இழக்க ஜாக் லீச் (ஸ்பின்னர்) 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 47.3 ஒவர்களில் 154/6 என்று முடிய ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸ் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 115 ரன்கள் எடுத்தார். பட்லர் (31), பேர்ஸ்டோ (30) ஸ்கோரை 250ஐத் தாண்டி நகர்த்தினர். ஆஸ்திரேலியா தரப்பில் கமின்ஸ் 3 விக்கெட் பீட்டர் சிடில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

267 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி ஜோப்ரா ஆர்ச்சரின் தீப்பொறி பந்து வீச்சை எதிர்கொள்ள நேரிட்டது. வார்னர் (5) கவாஜா (2) ஆகியோர் ஆர்ச்சரிடம் எட்ஜ் ஆகி வெளியேற பேங்கிராப்ட், ஜாக் லீச் பந்தில் எல்.பி.ஆக ஆஸ்திரேலியா 47/3 என்று தடுமாறியது.

அப்போது ஸ்மித்துக்காக முதன் முதலில் கன்கஷன் காயத்தின் பதிலி வீரராக களமிறங்கிய லபுஷேன் (59), ட்ராவிஸ் ஹெட் (42) ஆகியோர் ஸ்கோரை 132 வரை கொண்டு சென்றனர், லபுஷேன் 59 ரன்களில் லீச்சிடம் வெளியேற மீண்டும் ஒரு சரிவு கண்டது ஆஸி. ஆனால் தொடக்கத்திலேயே டிராவிஸ் ஹெட்டுக்கு கேட்சை விட்டார் ஜேசன் ராய். மேத்யூ வேட் விக்கெட்டையும் லீச் வீழ்த்தினார் டிம் பெய்ன், ஆர்ச்சர் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட, நன்றாக ஆடிய போதும் டென்லியின் அபாரமான இடது கை கேட்சுக்கு வெளியேற நேரிட்டது, கடைசியில் ஹெட் 42 நாட் அவுட், கமின்ஸ் 1 நாட் அவுட் என்று முடிய ஆட்டம் ஒருவிதமாக ட்ரா ஆனது.

ஸ்மித்தின் கழுத்தைப் பதம் பார்த்து அவரை சிகிச்சைக்கு அனுப்ப முதல் கன்கஷன் பதிலி வீரர் லபுஷேன் களமிறங்கியவுடன் ஜோப்ரா ஆர்ச்சர் மணிக்கு 93.6 மைல் வேகத்தில் ஒரு பந்தை குத்தி எழுப்ப நேராக ஹெல்மெட் முன்பக்க கம்பியை பலமாகத் தாக்கியது. நிலைகுலைந்தார் லபுஷேன், மைதானத்துக்குள் மருத்துவக் குழு நுழைந்தது, சில நிமிடங்களில் லபுஷேன் சுதாரித்து மீண்டும் பேட் செய்து டெஸ்ட் ட்ரா ஆவதை அரைசதம் மூலம் உறுதி செய்தார்.

ஆனால் சில பல ஷார்ட் பிட்ச் பவுன்சர் அடிகளை ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவர் வாங்கினார். எல்.பி அப்பீல் ஒன்றிலும் தப்பினார். ஏதோ ‘பாடி லைன்’ பவுலிங் போல் ஜோப்ரா ஆர்ச்சர் வீசுகிறார், இந்த ஆஷஸ் தொடரில் அவர் ‘ரத்தம்’ பார்க்காமல் ஓய மாட்டார் போல் தெரிகிறது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

லபுஷேனுக்கு மட்டுமல்ல உஸ்மான் கவாஜாவுக்கு 90 மைல் வேக ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தியைக் கடைபிடித்தார் ஆர்ச்சர், உலகின் அபாயகரமான பவுலர் இப்போதைக்கு ஆர்ச்சர்தான் என்ற அளவுக்கு அவர் வீசுகிறார்.

SCROLL FOR NEXT